திருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனால் 18 ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கர் என்று பெயர் சூட்டப்பட்ட குழந்தை வளர்ந்து, திருமாவளவனை காண சென்னைக்கு குடும்பத்துடன் வந்து வாழ்த்து பெற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இதுபற்றி நம்மிடம் மகிழ்ச்சியாக பேசிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், "2000 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி சாமிதோப்பில் பாலபிரஜாதிபதி அடிகளார்  நடத்திய ஒரு கூட்டத்தில் அண்ணன் திருமாவளவன் பங்கேற்றார். திருமாவளவனின் பேச்சு பலரையும் கவர்ந்து இழுத்த காலகட்டம்.  அந்த கூட்டத்தில் பேசிய அண்ணன்,  'சேரித் தெருவில் காந்தி, நேரு, இந்திராகாந்தி என்ற பெயருடைய குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால், எந்த ஊர் தெருவிலாவது அம்பேத்கர் பெயரை வைத்துக்கொண்ட  ஒரே ஒரு குழந்தை இருக்கிறதா? தேசத்தலைவர்களாக இருந்தாலும் வைக்கும் பெயரில் கூட சாதி பார்க்கிறார்கள்" என்று கோபத்துடன் பேசினார். அந்த கூட்டத்தில் தனபால் என்பவரது கர்ப்பிணி மனைவி சுதா கலந்து கொண்டார். 'அவருக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும். அக்குழந்தைக்கு  அம்பேத்கர் என பெயர் சூட்டுகிறோம், அந்த பெயர் சூட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொள்ள வேண்டும்’ என பாலபிரஜாதிபதி அடிகளார் அப்போதே அறிவித்தார்

அதுபோலவே தனபால், சுதா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பாலபிரஜாதிபதி அடிகளார் சாமிதோப்பில் எடுத்த  பெயர் சூட்டு விழாவில்  அண்ணன் திருமாவளவன் குழந்தைக்கு கலந்துகொண்டு  அம்பேத்கர் என பெயர் சூட்டினார்.

அக்குழந்தை வளர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின்னர்,  தற்போது தனக்கு அம்பேத்கர் என பெயர் சூட்டிய எங்கள் எழுச்சித் தமிழரைக் காண குடும்பத்துடன் சென்னை அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்தனர். மிக நெகிழ்ச்சியாக இருந்தது. பெயர் சூட்டிய நினைவுகளை அங்கிருந்தவர்களிடம் அண்ணன் திருமா பகிர்ந்து கொண்டார்.  தான் பெயர் சூட்டிய 18 வயது அம்பேத்கரை கண்டு மகிழ்ந்தார்" என்றனர்.

அம்பேத்கர், தற்போது 12-ம் வகுப்பில் தேர்வடைந்துள்ளார். திருமாவளவனின் உதவியோடு பட்டப்படிப்பில் சேர உள்ளதாக வி.சி.க-வினர் கூறுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!