`நினைவேந்தல் பெயரில் மெரினாவில் கூடினால் நடவடிக்கை' - எச்சரிக்கும் சென்னை போலீஸ்!

சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் பெயரில் ஒன்று கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மெரினா

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்பு சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், மக்களின் பொழுதுபோக்கு இடமான மெரினா கடற்கரையில், போராட்டங்களும் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே இங்குப் போராட்டம் நடத்தத் தடை விதித்திருந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் தான் இந்தத் தடை உத்தரவு தீவிரமாக பின்பற்றப்பட்டுவருகிறது. எனினும்,  கடந்த வருடம் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை மெரினாவில் நடத்தினார். அவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மெரினாவில் நினைவேந்தல் பெயரில் ஒன்று கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகர காவல்துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,  ``சென்னை மெரினா கடற்கரை, பிரசித்திபெற்ற ஓர் உலகப்புகழ் பெற்ற பொழுதுபோக்கு இடமாகும். இங்குப் பொழுதுபோக்கிற்காக ஏராளமான பொதுமக்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் தினசரி வந்து செல்கின்றனர். இங்கு அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், பாகுபாடின்றி எந்தவிதமான போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி அளிக்கப்படுவதில்லை. 

போராட்டம் நடத்த விரும்புபவர்கள், சென்னையில் போராட்டம் நடத்துவதற்கென்று காவல்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தைக் குறிப்பிட்டு, தக்க முறைப்படி கோரிக்கை மனு சமர்ப்பித்தால், அம்மனுவினை பரிசீலனை செய்து, காவல்துறையால் அனுமதி அளிக்கப்படும். நினைவேந்தல் நிகழ்வினை பெரும்பாலான அமைப்பினர் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், உள்ளரங்குகளிலும், நடத்திய போதும், சில அமைப்புகள் பொதுமக்கள் கூடும் மெரினாவில் கூடுவதாக அறிவித்துள்ளன. எனவே, யாரும் போராட்டம் என்ற பெயரில் மெரினாவில் தடையை மீறிக் கூடி, பொதுமக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் எனவும் மீறி போராட்டம், ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!