பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்ய நடைபெற்ற ஜமாபந்தி கூட்டம்..!

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சிவட்டம், தென்னிலை குறுவட்டத்திற்கான ஜமாபந்தி தொடக்க நாளான இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை மேற்கொண்டு,பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் 1427-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் நிர்வாகத் ஜமாபந்தி தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,  "கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட , குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர், மண்மங்கலம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 203 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி 18.5.2018 இன்று முதல் 31.5.2018 வரை நடைபெறுகிறது. அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட 58 வருவாய் கிராமங்களில் முதல் நாளான இன்று தென்னிலை குறுவட்டத்திற்குட்பட்ட அஞ்சூர், கார்வழி, மொஞ்சனூர், துக்காச்சி, தென்னிலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை பெற்று அதன்மீது,உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. 

வருடத்திற்கு ஒருமுறை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தி, பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காக நடைபெற்று வருகின்றன. அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும் நபர்களின் பெயர்கள் பதிவேடுகளில் உள்ளனவா என்பதையும், பயிர் கணக்குகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். மேலும் இன்று பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவினையும்,1 பயனாளிக்கு கார்வழி நொய்யல் நீர்தேக்கப் பகுதியிலிருந்து விளைநிலத்திற்காக மண் எடுத்துக்கொள்வதற்காக அனுமதியும் வழங்கப்பட்டன" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!