‘தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறது மோடி அரசு’ - கடுகடுத்த வைகோ.,

கொள்ளிடத்தில்  56 லட்சம் டன் மணலை எடுத்துள்ளது தமிழக அரசு. இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் சில கயவர்களுக்கு துணை போகிறார்கள் இந்த அதிகாரிகள் என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

                                

திருமானூரில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு சார்பில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைப்பதை கைவிட வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமை வகித்தார். திமுக மாவட்ட துணை செயலாளர் தனபால் வரவேற்றார். திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமாகா மாநில விவசாய பிரிவு துணை தலைவர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                                


சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசியதாவது,  “கொள்ளிடம் ஆற்றில் இதுவரை 56 லட்சம் டன் மணல் எடுக்கப்பட்டுள்ளது. மணலை பாதுகாக்க வேண்டிய சூழல் உள்ளது. காவிரி நீரின் உரிமையை நாம் இழந்து இருக்கிறோம். தமிழக மக்களுக்கு உண்மை நிலை இன்று புரிய வில்லை. நீதிமன்ற தீர்ப்பை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் வரவேற்றுள்ளனர். இது தமிழக மக்களை வஞ்சிக்க கூடிய தீர்ப்பாகும். மோடி அரசு தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறது. அதற்கு உச்சநீதிமன்றமும் துணை போகிறது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து 9 மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டுசெல்லப்படுகிறது. கோடி கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மக்கள் மணல் குவாரியை நிரந்தரமாக தடைசெய்ய கோரி மாவட்ட கலெக்டரிடம் ரேஷன்கார்டு, ஆதார் உள்ளிட்ட ஆவனங்களை ஒப்படைத்த போது, சமாதானம் செய்யாமல் அதனை பெற்றுக்கொண்டது கண்டிக்கதக்கது” என்றார்.

 கூட்டத்தில், மதிமுக மாவட்ட துணை செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, அசோகசக்ரவர்த்தி, வக்கீல் முத்துக்குமரன் உட்பட அனைத்து கட்சியினர், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!