வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (20/05/2018)

கடைசி தொடர்பு:15:54 (20/05/2018)

`பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா மும்பை? -பேட்டிங் தேர்வு செய்த டெல்லி #DDvsMI

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

மும்பை இந்தியன்ஸ்

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்வா, சாவா போராட்டம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கெனெவே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டன. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றால் நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். மும்பை அணி தோல்வியடையும் பட்சத்தில், பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அல்லது கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளில் ஒன்று முன்னேறும். 

மும்பை அணி, கடைசியாக விளையாடிய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேபோல், டெல்லி அணி, சென்னை அணிகெதிரான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால், இன்றைய போட்டியில் இரு அணிகளுமே நம்பிக்கையுடன் களமிறங்குகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாவிட்டாலும், வெற்றியுடன் முடிக்க ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி முயற்சிக்கும். அதேநேரம், பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைக்க மும்பை அணி கடுமையாகப் போராடும். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மும்பை அணியில் மெக்லெனஹனுக்குப் பதிலாக முஸ்தாபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் அவேஷ் கானுக்குப் பதிலாக லியாம் பிளங்கட் சேர்க்கப்பட்டுள்ளார்.