"மெரினாவில் தடை விதிக்கக் காரணம் இருக்கிறது!" - ரஜினிகாந்த் | "There will be reason for marina protest ban" - Rajinikanth

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (20/05/2018)

கடைசி தொடர்பு:16:17 (20/05/2018)

"மெரினாவில் தடை விதிக்கக் காரணம் இருக்கிறது!" - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் ஒரு வார்த்தை பேசினாலும் அது வைரலாகிவிடுகிறது! கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவித்தது முதலே தமிழக அரசியல் அரங்கு அதகளமாகிவருகிறது.

''அரசியலைப் பொறுத்தவரையில், பலமான கட்டமைப்புடன் நாம் காலடி வைத்தால்தான் போட்டிகளை சமாளித்து வெற்றி பெற வேண்டும். அதற்கான முயற்சியாக, நமது மன்றத்தினர் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களை நமது மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும். அரசியல் ரீதியாக எந்தவித எதிர்க்கருத்துகளையும் நாம் தெரிவிக்க வேண்டாம். போராட்டங்கள் நடத்துவதற்கென்று வேறு சில அமைப்பினரும் ஆட்களும் இருக்கிறார்கள். நாம் போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்'' என்ற பொருள்பட ரஜினிகாந்த் பேசியிருந்தது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, பொதுஇடங்களில் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் புன்னகையை மட்டுமே பதிலாக்கிவிட்டுச் சென்றுகொண்டிருந்தார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து, 'மக்கள் பிரச்னை குறித்தான நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுக்கிறார் ரஜினிகாந்த்' என்றக் குற்றச்சாட்டு ரஜினிகாந்த் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. 

ரஜினிகாந்த்

இந்நிலையில், இன்று 'ரஜினி மக்கள் மன்ற'த்தின் மகளிர் அணி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் அளித்தார். அந்தக் கேள்வி பதில்கள் அப்படியே இங்கே....

''150 தொகுதிகளில், ரஜினிகாந்துக்கு ஆதரவு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றனவே....?''

''அந்த செய்தி உண்மையாக இருந்தால் ரொம்ப சந்தோஷம்!'' (சிரிக்கிறார்)

''ஆன்மிக அரசியலை முன்வைப்பதாக இருந்தால், ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பதற்கு நான் யோசிக்க வேண்டியுள்ளது என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே...?''

''இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை... கூட்டணி பற்றியெல்லாம் அப்போது பார்த்துக்கொள்ளலாம்''

''கர்நாடகத் தேர்தலில் எடியூரப்பா ராஜினாமா செய்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாள் கால அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து. அப்படி அவர் செய்திருக்கக்கூடாது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றம் கொடுத்தது நல்ல தீர்ப்பு!''

''மெரினாவில், ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்துள்ளதே....?''

''சில குறிப்பிட்டக் காரணங்களுக்காகத்தான் இதுபோல் தடை விதிக்கிறார்கள். காரணமின்றி எதையும் செய்யமாட்டார்கள்''

''காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்கும் இந்த நேரத்தில், காவிரிப் பிரச்னையில் என்ன தீர்ப்பு கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?''

''உச்ச நீதிமன்றம் கூறியதை அவர்கள் நிறைவேற்றியே ஆகவேண்டும். அது அவர்களது கடமையும்கூட''

''தற்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி ஆணையம் பற்றி உங்களது கருத்து?''

''அணையின் முழுக் கட்டுப்பாடும் ஆணையத்தின் பொறுப்பிலேயே இருக்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. கர்நாடக அரசின் பொறுப்பில் ஆணையம் செயல்பட்டால், அது நல்லதல்ல. ஆணையத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருப்பார்கள். அரசியல் தலையீடு இருக்கும். எனவே, இவ்விஷயத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை போகப்போகத்தான் பார்க்கமுடியும்''

''கமல்ஹாசன் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கவில்லையே...?''

''அனைத்துக்கட்சிக் கூட்டம் என்று சொன்னார்கள். நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லையே கண்ணா.... அவர்களது முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துகள். இன்னும் போகப்போக நிறைய விஷயங்கள் இருக்கின்றன... அப்போது மக்கள் நலனுக்கான விஷயங்களில் கட்டாயம் சந்திப்போம்!''

''2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை ஆரம்பித்துவிடும் நோக்கில்தான் கட்சியினரைச் சந்தித்து வருகிறீர்களா?''

''அப்படியானத் திட்டம் என்றும்கூடச் சொல்லிக்கொள்ளலாம். தேர்தல் வருவதற்குள் எல்லாவற்றுக்கும் நாம் ரெடியாக இருப்போம். இதைத்தான் ஏற்கெனவே டிசம்பர் 31 ஆம் தேதியும் நான் சொல்லியிருந்தேன்.''


டிரெண்டிங் @ விகடன்