வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (20/05/2018)

கடைசி தொடர்பு:18:40 (20/05/2018)

`கேரள முதல்வர் பினராயி விஜயனை இதற்காகத்தான் சந்தித்தேன்!’ - கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கொச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று சந்தித்துப் பேசினார். 

கமல் - பினராயி விஜயன் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல், நட்பில் இருந்து வருகிறார். மதுரையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடக்க விழாவுக்கு நேரில் வர முடியாத சூழலிலும், வீடியோ ஒன்றின் மூலம் பினராயி விஜயன், வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், கொச்சியில் உள்ள போல்காட்டி பேலஸில் பினராயி விஜயனைச் சந்தித்து கமல் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பி.ராஜூவ் உடனிருந்தார். 

கர்நாடக தேர்தல் நிலவரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் மதிய உணவை ஒன்றாகவே எடுத்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது கர்நாடக அரசியல் நிலவரங்கள் குறித்தே இருவரும் அதிகம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ``மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக ஜூன் மாத மத்தியில் கோவை மாநகரத்தில் நடத்தப்பட உள்ள கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் நோக்கிலேயே பினராயி விஜயனைச் சந்தித்தேன். அவரது தேதிகளைப் பொறுத்தே, கோவை கூட்டத்தின் தேதிகள் முடிவு செய்யப்படும்’ என்றார்.