ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி! கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்

கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

ஸ்ரீரங்கம் கோயிலில் குமாரசாமி

கர்நாடக அரசியல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சூடுபிடித்தது. 104 இடங்களை மட்டுமே பிடித்த பா.ஜ.கவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின்  குமாரசாமி, ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று ஆளுநர், அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததுடன், 15 நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார். கர்நாடகாவின் முதலமைச்சராக வரும் 23-ம் தேதி பதவியேற்க இருக்கும் குமாரசாமி, பதவியேற்ற 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று கூறியுள்ளார். 

இந்தநிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் குமாரசாமி. இதற்காக, பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்த பின்னர் ஸ்ரீரங்கம் வந்தார். தெற்கு கோபுர வாசலில் அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குமாரசாமி வருவதற்கு முன்பாக, கோபுர வாசலில் கறுப்புக்  கொடியுடன் கூடிய பா.ஜ.கவினர் அவருக்குக் கறுப்புக் கொடி காட்ட முயன்றனர். ஆனால், போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!