இலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி!

சென்னையில் இலங்கைப் போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. மெரினாவில் நினைவேந்தல் நடத்த போலீஸார் தடை விதித்தநிலையில், பேரணியாகச் சென்று கடற்கரைக்குச் செல்ல முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

நினைவேந்தல் பேரணி 

இலங்கை இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மெரினா கடற்கரையில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என சென்னை போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இன்று காலை முதலே மெரினா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், பேரிகாடர்கள் அமைக்கப்பட்டு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

நினைவேந்தல் பேரணி


இந்தநிலையில், நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக சென்னையில் கூடிய 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாரதி சாலையிலிருந்து கண்ணகி சிலை வரை பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெஹ்லான் பாகவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்காணோர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். இதனால், பாரதி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 

நினைவேந்தல் பேரணி

பாரதி சாலையிலிருந்து கண்ணகி சிலை நோக்கி பேரணியாகச் சென்ற அவர்கள், மெரினா கடற்கரைப் பகுதிக்குள் நுழைய முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, வைகோ மற்றும் திருமுருகன்காந்தி உள்ளிட்டோருக்கும் போலீஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பேரணியாக வந்தவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேரணியாக வந்தவர்களை கைதாகுமாறு போலீஸார் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நினைவேந்தல் பேரணியில் ஈடுபட்டவர்கள், கைதாகினர். அவர்கள், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!