வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (20/05/2018)

கடைசி தொடர்பு:22:00 (20/05/2018)

`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஒரே நாளில் நடைபெற இருந்த 7 குழந்தை திருமணங்களை அதிகாரிகளும்,சைல்டுலைன் அமைப்பினரும் இணைந்து தடுத்து நிறுத்தினர்.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஒரே நாளில் நடைபெற இருந்த 7 குழந்தை திருமணங்களை அதிகாரிகளும், சைல்டுலைன் அமைப்பினரும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

குழந்தைத் திருமணம்


ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள கிளியூரைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கும்,அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் பாலமுருகன்(30) என்பவருக்கும் கிளியூரில் சிறுமியின் வீட்டில் நடைபெற இருந்த திருமணம், ராமேஸ்வரம் தீவு பாம்பன் பகுதியை சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கும் மதுரையை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக்(25) இவர்களிருவருக்கும் பாம்பனில் நடைபெற இருந்த திருமணம் ஆகிய திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும், முதுகுளத்தூர் ஒன்றியம் புல்வாய்க்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த பழனி மகன் முரளி (25) என்பவருக்கும் புல்வாய்க்குளம் பெருமாள் கோயிலில் நடைபெற இருந்த திருமணம், கடலாடி தாலுகா தேவர் நகர் பகுதியை சேர்ந்த 15 வயதுச் சிறுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் பழனிவேல்(30) என்பவருக்கும் சிறுமி வீட்டில் நடைபெற இருந்த திருமணம் ஆகியவை தடுத்து நிறுத்தப்பட்டன.

இதேபோல, ராமநாபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குருவாடி கிராமத்தை சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் அழகுராஜா (25) என்பவருக்கும் குருவாடியில் உள்ள சிறுமியின் வீட்டில் நடைபெற இருந்த திருமணம், கமுதி சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் விருதுநகர் மாவட்டம் தும்சப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி (29) என்பவருக்கும் கமுதியில் நடைபெற இருந்த திருமணம்,ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே கீழப்பெருங்கரையில் வசிக்கும் 15 வயதுச் சிறுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த 28 வயதுடைய அச்சிறுமியின் உறவினரான இளைஞர் ஒருவருக்கும் நடைபெற இருந்த திருமணம் ஆகியன இன்று  நடைபெற இருந்தது. அதிகாரிகள் நடவடிக்கையால் இந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

குழந்தை திருமணங்கள் குறித்து சைல்டுலைன் அமைப்பினருக்கு கிடைத்த தகவலின் பேரிலும் மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி உத்தரவின் பேரிலும் அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள்,சைல்டுலைன் அமைப்பின் நிர்வாகிகள் ஆகியோர் சேர்ந்து திருமணம் நடத்த இருந்த இடங்களுக்கு சென்று குழந்தை திருமணத்தைத் தடுத்தி நிறுத்தினர். அதனால் ஏற்படும் தீமைகளை சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி திருமணம் நடத்த மாட்டோம் எனவும் எழுதி வாங்கிக் கொண்டு திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்று திருமணம் நடைபெற இருந்த 17 வயது சிறுமிகள் 5 பேரும் இந்த ஆண்டு முதல் 12 ஆம் வகுப்பு படிக்க இருப்பதாகவும்,15வயதுச் சிறுமிகள் இருவரும் 10 ஆம் வகுப்பு படிக்க இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

குழந்தை திருமணங்கள் குறித்து அரசும் பல்வேறு சமூக நல அமைப்புகளும் ஏராளமான விழிப்புஉணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றன. ஆனாலும், கிராமப்புற மக்களிடையே இந்த விழிப்பு உணர்வு முழு அளவில் சென்றடையாததாலேயே இது போன்ற குழந்தை திருமணங்கள் நடத்துவதில் அவர்கள் ஈடுபடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் குழந்தை திருமணம் குறித்த விழிப்பு உணர்வை நகர பகுதிகளில் மட்டும் மேற்கொள்ளாமல், கிராமங்கள் வாரியாக கொண்டு செல்வதன் மூலம் இது போன்ற சம்பவங்களை தடுக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.