வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (20/05/2018)

கடைசி தொடர்பு:22:30 (20/05/2018)

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்

நியூயார்க் போலீஸில் முதல் முறையாக, சீக்கிய பெண் ஒருவர் அதிகாரியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர், இந்திய வம்சவழியை சேர்ந்தவர். 

Photo Credit: Twitter/@SikhOfficers

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி போலீஸ் அகாடெமியில் படித்தவர் குர்சோச் கவுர். இவர், கடந்த வாரம் தனது பட்டப்படிப்பினை முடித்து வெளியேறினார். இந்தநிலையில், அவருக்கு நியூயார்க் காவல் துறையின் கீழ் துணை நிலை காவல் அதிகாரியாகப் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு கதவை தட்டியது. 

இதன்பின், சற்றும் தாமதிக்காமல் பணி நியமன ஆணையைக் கையில் பெற்றுக் கொண்ட குர்சோச் கவுர், சீக்கியர்களின் பாரம்பரிய அடையாளமான டர்பனுடன் (தலைப்பாகை) கடந்த மே 17-ம் தேதி பணியில் சேர்ந்தார். இதன்மூலம், நியூயார்க் போலீஸில் சேர்க்கப்பட்ட முதல் சீக்கியப் பெண் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார். அதுமட்டுமல்லாமல், டர்பனுடன் அவர் பதவியேற்றது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

குர்சோச் கவுரை வரவேற்று, சீக்கிய அதிகாரிகளுக்கான கூட்டமைப்பு ட்விட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளது. அதில், `நியூயார்க் காவல் துறையில் முதன் முதலாக டர்பனுடன் துணைநிலை காவல் அதிகாரியாகப் பதவியேற்றுள்ள குர்சோச் கவுரை வரவேற்கிறோம். இதற்காக, நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும், பாதுகாப்புடன் இருக்கவும் கேட்டுக்கொள்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நியூயார்க் காவல் துறையும், `அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதிக்க முடியும் என்பதுக்கு, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக குர்சோச் கவுர் இருப்பார்' எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக, நியூயார்க் காவல் துறையில் உள்ள சீக்கியர்களுக்கு சீருடை கொள்கையில் தளர்வு செய்யப்பட்டது. சீக்கிய அதிகாரிகள் டர்பன் அணியவும், தாடி வளர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.