வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (21/05/2018)

கடைசி தொடர்பு:08:28 (21/05/2018)

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பில் நிறைவேற்றப்பட்ட 2 முக்கிய தீர்மானங்கள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். பேராசிரியை பாத்திமா பாபு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பில் இருந்து நீக்கம் என இரண்டு தீர்மானங்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் நிறைவேற்றியுள்ளனர். 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக  மூடிட வலியுறுத்தியும், ஆலையின் விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரியும்  21 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், 19-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் மடத்தூரில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஆலையை மூடக்கோரி வரும்     22 -ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர்.  

இந்நிலையில், நேற்று (20-05-18) காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரசாந்த் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர்  தலைமையில், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு, மீனவ அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. 

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, வரும் 22-ம் தேதி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்தில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி பெற்றுள்ளதாக, போராட்டக் குழுவின் பேராசிரியை பாத்திமாபாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை பண்டாரம்பட்டி கிராமத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 22 -ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை முற்றுகைப் போராட்டம் நடத்துவது மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பிலிருந்து பேராசிரியை பாத்திமாபாபுவை நீக்குவது உள்ளிட்ட இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிராம மக்களில் ஒருவரான சுபித்ரா, 'மக்களின் போராட்ட வடிவத்தையும் இடத்தையும்  பேராசிரியர் பாத்திமா பாபு மக்கள் முடிவுக்கு மாறாக தன்னிச்சையாக மாற்றியமைத்து, போராடும் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளார்கள். அதனால், பாத்திமா பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரையும் நீக்கியுள்ளோம். சமாதானக் கூட்டம் என்கிற பெயரில் ஒரு சார்பாக நடந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகளோ, தீமானங்களோ எந்த வகையிலும் பொதுமக்களால் உருவாக்கப்பட்ட மக்கள் கூட்டமைப்பைக் கட்டுப்படுத்தாது.  எனவே, திட்டமிட்டபடி வரும் 22-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும்' எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க