வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (21/05/2018)

கடைசி தொடர்பு:09:58 (21/05/2018)

சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளில் மாற்றம் - ஸ்டாலின் கண்டனம்!

.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வு விதிமுறைகளில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு அலோசித்துவருகிறது. 

சிவில் சர்வீஸ்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., தான்   ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸ்  தேர்வுகளை நடத்திவருகிறது. முதல்நிலைத் தேர்வில் வெற்றியடைந்துவிட்டால் பிரதான தேர்வு, அதில் பெறும் மதிப்பெண்களைக்கொண்டு ஐ.ஏ.எஸ்.,  ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். அதற்குப் பிறகு, மூன்று மாத அடிப்படைப் பயிற்சி ( Foundation course) அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

இனிமேல், பிரதான தேர்வின் மதிப்பெண் மட்டுமல்லாது, அடிப்படைப் பயிற்சியில் பெறும் மதிப்பெண்ணையும் கணக்கில்கொண்டுதான் எந்தப் பணிக்கு ஒருவரைத் தேர்வுசெய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவுசெய்ய இருப்பதாக மத்திய பணியாளர் சீர்திருத்தத் துறையின் இணைச் செயலாளர் விஜய்குமார் சிங் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விதிமுறை மாற்றம் சாத்தியம்தானா என்பது குறித்தும் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ யூ.பி.எஸ்.சி தேர்வுகளில் சமூக நீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஃபவுண்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பழங்குடியின இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க