வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (21/05/2018)

கடைசி தொடர்பு:14:40 (21/05/2018)

`போலியான முகவரி...’ - சென்னை போலீஸுக்கு `அல்வா' கொடுத்த துணை நடிகை 

நடிகை


சென்னை குன்றத்தூர் பகுதியில், துணை நடிகையை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை மூன்று பேர் பறித்துச்சென்றதாகப் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதை விசாரித்த போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. 

சென்னை குன்றத்தூர் பகுதியில், துணை நடிகை ஒருவரிடமிருந்து நகை, பணம், செல்போன் ஆகியவற்றை மூன்று பேர் பறித்துச் சென்றதாக குன்றத்தூர் போலீஸாருக்கு சில நாள்களுக்கு முன்பு புகார் வந்தது. புகார் கொடுத்த துணை நடிகை, வடபழனி முகவரியைக் கொடுத்திருந்தார். துணை நடிகையுடன் வழக்கறிஞர் ஒருவரும் வந்திருந்தார். புகாரைப் பெற்ற போலீஸார், அதுதொடர்பாக விசாரித்தனர். விசாரணையில் துணை நடிகை கொடுத்தது பொய்ப் புகார் என்று தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " குரூப் டான்ஸரும் துணை நடிகையுமான அவர், சம்பவத்தன்று குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில், `சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறி, ஒருவர் என்னிடம் போனில் பேசினார். பிறகு, இயக்குநரை சந்திக்க என்னை குன்றத்தூருக்கு வாடகைக் காரில் அழைத்துச்சென்றார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்றார். எங்கள் காரைப் பின்தொடர்ந்து பைக்கில் இரண்டு பேர் வந்தனர். அவர்களும் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது, அந்த மூன்று பேரும் என்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டனர். அவர்களிடமிருந்து தப்பிக்கப் போராடி தோற்றுப்போனேன். 
நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக அவர்கள் மிரட்டினர். மேலும், நகை, பணம், செல்போன் ஆகியவற்றை அவர்கள் பறித்துக்கொண்டு, காரில் மீண்டும் அழைத்துச்சென்றனர். குன்றத்தூர் பகுதியில் உள்ள வெளிவட்டச் சாலையில் நள்ளிரவில் இறக்கிவிட்டுவிட்டுத் தப்பிவிட்டனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

புகாரின் பேரில் துணை நடிகையிடம் பெண் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, ''துணை நடிகையை அழைத்துச்சென்ற ஒருவரின் செல்போன் நம்பரை எங்களிடம் அவர் கொடுத்தார். அதை வைத்து விசாரித்தபோது, அது தவறான எண் என்று தெரிந்தது. மேலும், வாடகை கார் குறித்து விசாரித்தபோது, அதுவும் பொய் என்று தெரிந்தது. இதனால், துணை நடிகையின் செல்போனில் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.  அடுத்து, அவர் கொடுத்த வடபழனி முகவரிக்குச் சென்று விசாரித்தோம். அந்த முகவரியில் துணை நடிகை வசிக்கவில்லை. இதனால், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்த வழக்கறிஞரிடம் விசாரித்தோம். அப்போது அவர், துணை நடிகைகுறித்து தனக்கும் தகவல் தெரியவில்லை; மீண்டும் அவர் என்னைத் தொடர்புகொண்டால் தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறினார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, துணை நடிகை கொடுத்தது தவறான தகவல்கள் என்று தெரியவந்துள்ளது. துணை நடிகையிடம் விசாரணை நடத்திய பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "துணை நடிகை எதற்காகப் பொய்யான தகவலைக் கொடுத்தார் என்று விசாரணை நடந்துவருகிறது. அவர் புகாரில் கூறியதுபோல எந்தவித சம்பவமும் குன்றத்தூரில் நடக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக துணை நடிகையிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அவரிடம் விசாரித்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறிய இயக்குநர் யார்? அவரை அழைத்துச் சென்றவர்கள் யார் என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைத்தால் மட்டுமே இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க முடியும். இதனால், துணை நடிகை கொடுத்த புகாருக்கு எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யவில்லை. முதற்கட்டமாக மனு ஏற்புச் சான்றிதழ் மட்டுமே வழங்கியுள்ளோம். குன்றத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்பது எங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.