வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (21/05/2018)

கடைசி தொடர்பு:15:05 (21/05/2018)

`குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது' - எச்சரிக்கும் ராமதாஸ்

காவிரிப் பிரச்னை தொடர்பாகக் கர்நாடக அரசுடன் எந்தக் காலத்திலும் தமிழக அரசு பேச்சு நடத்தக் கூடாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராமதாஸ்

இது தொடர்பாக இவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசும் கர்நாடக அரசும் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம்தான் காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார். குமாரசாமியின் இந்த யோசனை மிகவும் ஆபத்தானது. காவிரியில் தமிழகத்துக்கு உள்ள கொஞ்சநஞ்ச உரிமைகளையும் தட்டிப்பறிக்கும் செயலாகும்.

காவிரிப் பிரச்னையில் தீர்வு காண்பதற்காகக் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள அணைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்த அமைப்புக்கு இல்லாத நிலையில் இது பயனற்ற அமைப்பு என்பதுதான் பா.ம.க நிலைப்பாடு ஆகும். அதேநேரத்தில் இயல்பான மழைக்காலங்களில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும் வறட்சிக் காலங்களில் இடர்ப்பாட்டுக்கால நீர்ப் பகிர்வு முறைப்படியும் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கர்நாடக அரசு செயல்படுத்தினால் காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டுவிடும். எனவே, காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கர்நாடகப் புதிய முதலமைச்சர் குமாரசாமி நினைத்தால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தும் என்று அறிவிக்க வேண்டும்.

ஆனால், அதற்கு முற்றிலும் மாறாகக் காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்றால் தமிழகமும் கர்நாடகமும் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறுவது உச்ச நீதிமன்றம் போன்ற சட்ட அமைப்புகளையும் தமிழக மக்களையும் முட்டாள்களாக்கும் செயலாகும். காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விஷயத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமிழகத்துக்கு முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்றாலும்கூட இன்றைய நிலையை எட்ட தமிழகம் பட்ட பாடுகளும் நடத்திய சட்டப் போராட்டங்களும் ஏராளமானவை. காவிரி நடுவர் மன்றம் 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பின்னர், 17 ஆண்டுக்கால விசாரணைகளுக்குப் பிறகுதான் 2007-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பு வெளியான சில மாதங்களில் அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியம் 11 ஆண்டுகள் கழித்தே அரை-குறை அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

 காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்படுவதற்கு முன்பாக அத்தகைய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பலகட்டங்களில் சட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றையும் கணக்கில் கொண்டால் காவிரிப் பிரச்னையில் இன்றைய நிலையை எட்ட குறைந்தது 35 ஆண்டுகள் தமிழகம் சட்டப் போராட்டம் நடத்தியுள்ளது. 35 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி, அதன் மூலம் காவிரிப் பிரச்னையில் இழந்த உரிமைகளில் ஓரளவை தமிழகம் மீட்டெடுத்துள்ள நிலையில், அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் பேச்சு நடத்தலாம் என்பதே மனசாட்சியைக் கழற்றி அடகு வைத்துவிட்டு பேசும் பேச்சு ஆகும். காவிரி நீர்பகிர்வு தொடர்பாகத் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே 1924-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் 1974-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக 1960-களின் இறுதியில் தொடங்கி 1970-களின் இறுதி வரை சுமார் 10 ஆண்டுகள் பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. காவிரி விவகாரம் இந்த அளவுக்கு மோசமாகியிருப்பதற்கு அதுதான் காரணம் ஆகும். அண்ணா காலத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி காலம் வரை காவிரிப் பிரச்னை தொடர்பாக இருமாநிலங்களுக்கும் இடையே நூற்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்ட பேச்சுகளால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

 இதற்கு காரணம் கர்நாடகத்தின் பிடிவாதமும் சட்டத்தை மதிக்காத போக்கும்தான். காவிரிப் பிரச்னை குறித்த கடந்த கால உண்மைகள் இவ்வாறு இருக்கும் நிலையில், காவிரி சிக்கல் எந்த இடத்தில் தொடங்கியதோ அந்த இடத்துக்கே மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் காவிரி சிக்கலை பேசித் தீர்க்க வேண்டும் என்று கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் பிரச்னையின் ஆழம் புரியாமல் கர்நாடக அரசுடன் பேசி காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்று கூறிவருகின்றனர். இந்த யோசனைகள் காவிரிப் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலாக்கிவிடும். எனவே, காவிரிப் பிரச்னை தொடர்பாகக் கர்நாடக அரசுடன் எந்தக் காலத்திலும் தமிழக அரசு பேச்சு நடத்தக் கூடாது. மாறாக, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்க வைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.