2 நாளில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்

காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது. இதிலும் தமிழகத்துக்கு எதிரான வேலையைச் செய்திருக்கிறது மத்திய அரசு'' எனக் கடுமையாக விமர்சனம் செய்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

திருமாவளவன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவில் உள்ள வயலப்பாடி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்றுவிழா நடந்தது. விழாவுக்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டைத் திறந்து வைத்துப் பேசினார். பின்னர், அருகில் உள்ள நூலகம் ஒன்றையும் திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "கர்நாடகாவில் மதச்சார்பற்ற சக்திகள் தேர்தலுக்கு முன்னரே கூட்டணி அமைத்திருக்க வேண்டும். கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி தவறியதால் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறிவிட்டன. மதச்சார்பற்ற ஜனதாதளம் கணிசமான இடங்களில் மட்டும் வெற்றி பெற்றதால் தொங்கு சட்டசபை உருவாகிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகப் படுகொலையைச் செய்துவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் நடுவர் நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு ஆகும். ஆனால், உச்ச நீதிமன்றம் இதைப் பொருட்படுத்தவில்லை. மாறாக வாரியத்துக்குப் பதிலாக ஆணையத்தை அமைக்கத் தீர்ப்பளித்துள்ளது. ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியதாகவே அமையும். கடந்த ஏப்ரல் 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றுதான் கூறப்பட்டிருந்தது. அதற்குக் கர்நாடக அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஒப்புதல்தான் அளித்தது. ஆனால், இரண்டு நாள்கள் கழித்து மத்திய அரசு சில நிலைப்பாட்டை மாற்றியது ஏன் என்று விளங்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

காவிரி பிரச்னைக்கு தி.மு.க, தோழமை கட்சிகளுடன் நடத்தும் கூட்டம் 22-ம் தேதி சென்னையில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் காவிரி பிரச்னை குறித்தும் காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் விவாதிக்க உள்ளோம். காவிரி பிரச்னைக்காகக் கமல்ஹாசன் கூட்டிய கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தற்காக கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!