நிபா வைரஸ் பாதிப்பு - கேரளாவில் வேலை செய்யும் தமிழகத் தொழிலாளர்கள் கண்காணிப்பு! | Nipah virus spread: TN workers in kerala are closely watched, says kaniyakumari district collector

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (21/05/2018)

கடைசி தொடர்பு:16:20 (21/05/2018)

நிபா வைரஸ் பாதிப்பு - கேரளாவில் வேலை செய்யும் தமிழகத் தொழிலாளர்கள் கண்காணிப்பு!

நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதைத் தடுக்கும் விதமாகக் கேரளாவில் வேலை செய்யும் தமிழர்கள் கண்காணிக்கப்படுவதாகக் குமரி மாவட்டக் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதைத் தடுக்கும் விதமாகக் கேரளாவில் வேலை செய்யும் தமிழர்கள் கண்காணிக்கப்படுவதாகக் குமரி மாவட்டக் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே

 

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக 10 பேர் உயிரிழந்த நிலையில் எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரியிலும் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டக் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அச்சப்படத் தேவையில்லை. குமரியில் 141 தனியார் மருத்துவமனைகளும் 11 அரசு மருத்துவமனைகளும் உள்ளன. மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவதைத் தடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் நிபா காய்ச்சல் குறித்த அறிகுறி எதுவும் ஏற்படவில்லை. இந்தக் காய்ச்சல் கொசு மூலமோ கேரளாவிலிருந்து வரும் வாகனம் மூலமோ பரவாது. குமரி மாவட்டத்திலிருந்து நிறைய தொழிலாளர்கள் கேரளாவில் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள். டெங்கு காய்ச்சலின்போதும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தது.

மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயார்நிலையில் இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டத்துக்கும் நமது மாவட்டத்துக்கும் நீண்ட இடைவெளி இருப்பதால் நாம் அச்சப்பட வேண்டாம். காய்ச்சல் ஏற்பட்டால் சுய மருத்துவம் செய்ய வேண்டாம், அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும். நிபா வைரஸ் தாக்குதலுக்கு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசு மாவட்ட சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்த விவரங்கள் குமரி மாவட்டத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.