வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (21/05/2018)

கடைசி தொடர்பு:17:47 (21/05/2018)

`இந்தப் படத்தில் நடித்ததால் மிரட்டுகிறார்கள்' - கண்கலங்கும் நடிகை தன்யா 

நடிகை

18.05.2009 என்ற படத்தில் நடித்ததற்காக என்னை பல வகையில் மிரட்டுகின்றனர் என்று நடிகை தன்யா கண்கலங்கினார். 

உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை தன்யாமீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில்,"நடிகை தன்யா என்பவர் ஓரிரு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழர் அல்லாத மாற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பதால் தமிழர்கள் மேல் இயற்கையாக இருக்கும் காழ்ப்பு உணர்ச்சியைக் கொண்டுள்ளார். 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த போரை மையமாக வைத்து எடுத்திருக்கும் `18.5.2009' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்ததற்காகத் தனக்கு வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் தொலைபேசியில் மிரட்டுவதாகக் காவல்துறையிடம் பொய்யான புகார் கொடுத்துள்ளார். மேலும், இந்தப் புகாரை மீடியாக்களுக்கு அனுப்பி கீழ்த்தரமான சுய விளம்பரம் தேட நினைக்கிறார் என்றே தெரிகிறது. இவரால் காவல்துறைக்கு அனுப்பப்பட்ட மனுவில் தனக்கு மட்டுமின்றி அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் மிரட்டல் வருவதாகச் சொல்லியுள்ளார். புகார் உண்மையானதா என்பதைத் தெரிந்துகொள்ள புகார் நடிகைகொடுக்கப்பட்டவர் மற்றும் மிரட்டப்பட்டவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். உண்மையை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தப் புகார், பொய்யானதாக இருக்கும்பட்சத்தில் புகார் கொடுத்தவர்மீது உரிய விசாரணை நடத்தி தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" எனப் புகாரில் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அக்னியிடம் பேசினோம். "நடிகை தன்யா, பிரபல நடிகர் ஒருவரின் பேத்தி. அவர், தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர். உலகத்தில் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்துவருகிறோம். நடிகை தன்யா கொடுத்த புகாரால் உலகத் தமிழர்கள் நம்மைவிட்டு பிரிந்து ஓடிவிடுவார்கள். அவரின் புகாரை சுயவிளம்பரமாகவே பார்க்கிறோம்" என்றார். 

நடிகை தன்யாவிடம் பேசினோம். "நான் பிறந்தது சென்னையில்தான். என்னுடைய தாய்மொழி தமிழ்தான். மொழியைப் பயன்படுத்தி ஆதாயம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மிரட்டல் வந்தது தொடர்பான ஆவணங்களைப் போலீஸாரிடம் கொடுத்துள்ளேன். எனக்கு மிரட்டல் விடுத்தவர்கள்மீது போலீஸார் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள். இந்தப் படத்தில் நடித்ததால் எனக்கு பலவகையில் மிரட்டல்கள் வருகின்றன. இருப்பினும் அதைத் தைரியமாக எதிர்கொள்வேன்" என்றார்.