மரகதலிங்கம் மாயமான வழக்கை கையில் எடுக்கும் பொன்.மாணிக்கவேல்?

மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் காணாமல் போன விவகாரத்தை

மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் காணாமல் போன விவகாரத்தை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் செயல்படும் `சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர்' விசாரணை நடத்தவுள்ளதாக வரும் தகவலை கேட்டு மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் குன்னத்தூர் சத்திரத்தில் இருந்த மரகதலிங்கம் காணாமல் போன சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இது சம்பந்தமாகப் பலபேர் புகார் எழுப்பியும் அரசு இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் வழக்கறிஞர் முத்துக்குமார் வழக்கு தாக்கல் செய்த பின்பு இந்த விவகாரம் பரபரப்பானது. மாநகராட்சி அதிகாரிகள் பதறிப்போனார்கள். விசாரணை கமிட்டி அமைத்தும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில்தான், பல சிலை கடத்தல் கும்பல்களைக் கண்டுபிடித்து வரும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

வழக்கறிஞர் முத்துகுமார்இது சம்பந்தமாக வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் பேசினோம். ``குன்னத்தூர் சத்திரத்தில் காணாமல்போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கத்தைக் கண்டுபிடிக்கும்படி மதுரை தல்லாகுளம் குற்றப்பிரிவில் முதலில் புகார் அளித்தேன். புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றதும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். மாநகராட்சி கமிஷனரை ஆஜராக உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஸ்படிக லிங்கம் மட்டுமே இருந்ததாக மாநகராட்சி தரப்பு விசாரணையில் கூறியது. ஸ்படிகம் வெள்ளை நிறத்தில் இருக்கும். காவல்துறை விசாரணையில் பச்சை நிற லிங்கத்துக்கு மாநகராட்சி சார்பில் பூசாரி நியமித்து பூஜை செய்ததாகக் கூறப்பட்டது. ஸ்படிக லிங்கமாக இருந்திருந்தால் அதற்கு பூசாரி நியமித்து சம்பளம் கொடுப்பார்களா என்ற கேள்விக்கு, மாநகராட்சியால் பதில் சொல்ல முடியவில்லை. இது சம்பந்தமாக மத்திய உளவுத்துறையினரும் என்னை விசாரித்தனர். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில்தான், தற்போது ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் என்னிடம் விசாரணை செய்துவிட்டு சென்றுள்ளனர். மரகதலிங்கம் விவகாரத்தில் இனியாவது உண்மை வெளிவரட்டும்'' என்றார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!