வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (21/05/2018)

கடைசி தொடர்பு:18:00 (21/05/2018)

`கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே தீர்ப்பளித்தனர்!’ - அமித்ஷா விமர்சனம்

கர்நாடகா தேர்தலில் 104 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க-வே உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறினார். 

அமித் ஷா

கர்நாடகத் தேர்தல் முடிவில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க. 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றவர்கள் 2 இடங்களில் வென்றனர். அதேநேரம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தது. இதனால், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆட்சியமைக்கப் போதிய எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இல்லாத நிலையிலும் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். இதை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில், முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதையடுத்து, குமாரசாமியை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்ததை ஏற்று, அவர் நாளை மறுநாள் (23.5.2018) கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கிறார். 

இந்தநிலையில் கர்நாடகத் தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில்,``கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்தது. மக்களின் தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அமைந்தது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க பா.ஜ.கவுக்கு எல்லா உரிமையும் இருந்தது. ஆட்சியமைக்க வேண்டிய பெரும்பான்மைத் தொகுதிகளில் 7 தொகுதிகள் மட்டுமே குறைவாக பா.ஜ.க. பெற்றுள்ளது.  
காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே மக்கள் தீர்ப்பளித்தும், அந்தக் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 122 இடங்களை வைத்திருந்த காங்கிரஸ் தற்போது 78 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதையா காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் அமைச்சர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் தேர்தலில் தோற்றிருக்கின்றனர். அதிலும், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையாவும் ஒரு இடத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்காகப் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது. குதிரைபேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எம்.எல்.ஏ-க்களை நட்சத்திர விடுதிகளில் தங்கவைத்து காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும். அதேபோல், 38 இடங்களில் மட்டுமே வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் மோசமாக செயல்பட்டிருந்தும் அவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கர்நாடக மக்கள் ஏற்கவில்லை’’ என்றார்.