வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (21/05/2018)

கடைசி தொடர்பு:18:40 (21/05/2018)

`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி 

கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி, அம்மாநிலத்தின் அணைகளில் உள்ள நீர்மட்டத்தைப் பார்க்க வருமாறு நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

குமாரசாமி - அழைப்பு

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளன. எனவே, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி வரும் மே 23-ம் தேதியில் கர்நாடக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இதனால், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுக்கு குமாரசாமி தரப்பிலிருந்து அழைப்பு விடப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கர்நாடகத்தில் அமைய உள்ள புதிய அரசு செயல்படுத்த வேண்டும். அது அந்த அரசின் கடமை. கர்நாடகத்தில் உள்ள அணைகளின் கட்டுப்பாடு என்பது காவிரி மேலாண்மை ஆணையத்திடம்தான் இருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடு கர்நாடகத்திடம் இருப்பது நல்லதல்ல" என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி, "கர்நாடகா அணைகளில் உள்ள நீர் இருப்பு கர்நாடகாவுக்கே போதாத நிலையில் உள்ளது. எனவே, கர்நாடகா அணைகளில் உள்ள நீர் நிலவரத்தைப் பார்வையிட வருமாறு ரஜினிகாந்த்தை அழைத்துள்ளேன். இதனால், கர்நாடக அணைகளின் நீர் நிலைமை பற்றி ரஜினிகாந்த் புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்' என்றார்.