நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இலவச ஓவியப்பயிற்சி முகாம்!

நெல்லையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஓவியப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்..

நெல்லையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஓவியப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.. 

ஓவியப்பயிற்சி

கோடை விடுமுறையை மாணவ மாணவிகள் பயனுள்ள வகையில் செலவிடும் வகையில், ஓவியங்கள் வரைவதற்கான பயிற்சியைத்  தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு வழங்க அரசு அருங்காட்சியகம் ஏற்பாடு செய்துள்ளது. பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவ மாணவிகள் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்புப் பயிற்சி பெற்று வருகிறார்கள். 

அரசு அருங்காட்சியகத்தில் பழங்காலச் சிற்பங்கள், முதுமக்கள் தாழி, பழங்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அணிகலன்கள் என பாரம்பர்யம் மிகுந்த கலைப்பொருள்கள் ஏராளமாக உள்ளன. கோடை விடுமுறையில் உள்ள மாணவ மாணவிகளுக்காக அருங்காட்சியகத்தில் பல்வேறு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இரண்டு நாள் ஓவியப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (21-ம் தேதி) தொடங்கிய ஓவியப் பயிற்சியானது, நாளையும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 23-ம் தேதி சிறப்பு ஓவியக்கண்காட்சி நடைபெற உள்ளது. அதில், கலைப் பொருள்களை நேர்த்தியாக உருவாக்குவதில் வல்லவரான சிற்பி பாமா கலந்துகொள்வதுடன், தனது படைப்புகளை அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்க உள்ளார். மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அறிஞரான எஸ்.சுதாகர், `விந்தை மண்புழு’ என்கிற தனது ஆய்வுக் கட்டுரை குறித்து மாணவர்களிடம் விவரிக்க உள்ளார். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என நெல்லை அருங்காட்சியக் காப்பாட்சியர் சத்தியவள்ளி தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!