`தோனியும், சி.எஸ்.கே. வாழ்வும்!’ - ஷேன் வாட்சனின் ஐபிஎல் ஷேரிங்க்ஸ் | Shane watson speaks about CSK and Dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/05/2018)

கடைசி தொடர்பு:19:00 (21/05/2018)

`தோனியும், சி.எஸ்.கே. வாழ்வும்!’ - ஷேன் வாட்சனின் ஐபிஎல் ஷேரிங்க்ஸ்

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

ஷேன் வாட்சன்

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை அணி, லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. 9 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் லீக் சுற்றை முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றில் முதல் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது குறித்து ஷேன் வாட்சன் மனம் திறந்துள்ளார். 

அவர் கூறுகையில், ``தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்ததைப் பாக்கியமாகக் கருதுகிறேன். அதேபோல், சென்னை அணியின் தொடக்க வீரராக இந்த சீசன் முழுவதும் விளையாடும் வாய்ப்பையும் அந்த வகையிலேயே நான் பார்க்கிறேன். கிரிக்கெட் விளையாட்டை தோனி புரிந்து வைத்துள்ள விதம், முடிவுகளை அவர் எடுக்கும் விதம் என அனைத்தையும் அருகிலிருந்து பார்ப்பது மற்றும் அதுகுறித்து கேள்விகள் எழுப்பும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்களை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் வெகுசில வீரர்களிடமே அதை உணர்ந்துள்ளேன். அந்தப் பட்டியலில் தோனிக்கு முக்கியமான இடம் இருக்கும். தோனி போன்ற உள்ளுணர்வைக் கேட்டு முடிவெடுக்கும் நிகழ்வு என்பது கிரிக்கெட் உலகில் மிகவும் அபூர்வமானது.

கிரிக்கெட் தொடர்பான அவரது உள்ளுணர்வு என்பது, உதாரணமாக பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய வேண்டும், பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கி இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் அவர் களமிறங்கும் பொசிஷனை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். சேஸிங்கின் போது 10-ல் 9 போட்டிகளில் அவர் வெற்றி தேடித்தந்து விடுவார். எனது ஐபிஎல் ஃபார்முக்கு தோனி முக்கியமான காரணம்’ என்றார். சென்னை அணிக்காக இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள வாட்சன், ஒரு சதம் 2 அரைசதங்கள் உள்பட 438 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல்,  விக்கெட்டுகளையும் அவர் எடுத்துள்ளார்.