வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (21/05/2018)

கடைசி தொடர்பு:20:30 (21/05/2018)

`மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் மீட்கப்படும்!’ - நிர்வாகம் அறிவிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நான்காயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நான்காயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாருக்குப் பதிலளிக்கும் விதமாக, பத்துக் கோடி ரூபாய் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீட்கப்படும் மீனாட்சி

திருத்தொண்டர் சபை எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் மதுரைக்கு வந்திருந்து, `மாட்டுத்தாவணி எதிரே மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 68 ஏக்கர் நிலத்தைப் பலரும் ஆக்கிரமித்துள்ளனர், விதியை மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கோயில் நிர்வாகம் மீட்க வேண்டும்' என்று புகார் எழுப்பியிருந்தனர். இந்த விவகாரம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ``மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட சொத்துகள் எதையும் பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என்று அனைத்து சார் பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளருக்கும், தாலுகா அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். கோயில் கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை கட்டளை நிர்வாக அறங்காவலர்களாக இருந்தவர்கள் நீதிமன்றம் மூலம் சில உத்தரவைப் பெற்று நீண்டகாலமாக விற்பனை செய்து வந்துள்ளனர். அதை தடுத்துள்ளோம். கட்டளை நிர்வாகச் சரத்துகளை மீறி விற்பனை செய்யும் கட்டளை நிர்வாக அறங்காவலர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அதிகாரம் மண்டல இணை ஆணையருக்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் கோயிலுக்குச் சொந்தமான பத்துக் கோடி மதிப்புள்ள பல விவசாய நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 9 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சொத்துகளை மீட்கும் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க