`கல்லூரி மாணவர் சேர்க்கையில் விதிமுறை மீறல்!’ - மூட்டா சங்கம் குற்றச்சாட்டு

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அரசின் விதிமுறைகளை மீறி சில கல்லூரிகள் செயல்பட்டு வருவதாகப் பல்கலைக் கழகத்தின் மூட்டா சங்கம் புரபரப்புக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அரசின் விதிமுறைகளை மீறி சில கல்லூரிகள் செயல்பட்டு வருவதாகப் பல்கலைக் கழகத்தின் மூட்டா சங்கம் பரபரப்புக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை குறித்து மூட்டா

மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் கூட்டமைப்பான மூட்டா அமைப்பின் பொதுச் செயலாளரான முனைவர்.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பிளஸ் டூ தேர்வுகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில், விண்ணப்பப் படிவங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, நன்கொடை பெற்றுக்கொண்டு ஸ்பாட் அட்மிஷன், அதிகமான விருப்பம் கொண்ட பாடப் பிரிவுகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடவும் கூடுதல் கட்டணம் வசூல், இளங்கலைப் பட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே முதுநிலை படிப்புக்கான மாணவர்களைச் சேர்ப்பது என அனைத்து விதமான சட்ட விரோத நடவடிக்கைகளையும் தனியார் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. 

இந்த ஆண்டும் கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது. தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை தகவல் பலகையில் ஒட்டுதல், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை, விண்ணப்பப் படிவத்துடன் வழங்கப்படும் குறிப்புப் புத்தகத்தில் கல்விக் கட்டணத்தை அச்சடித்தல், அதில் உள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்தல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுக்குச் சேர்க்கை முடிவடைந்த பின்னரே சுயநிதி பாடப் பிரிவுக்கான சேர்க்கையை நடத்துவது உள்ளிட்ட விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. 

இந்த விதிமுறைகள் அனைத்தையும் தனியார் கல்லூரிகள் அமல்படுத்துவதை மதுரை மற்றும் நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகங்களும் மதுரை காமராசர் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழக நிர்வாகங்களும் உத்திரவாதப்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோரின் குறைகளையும் புகார்களையும் உடனுக்குடன் களைந்திட தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை விதிமுறைகளை மீறிச் செயல்படும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!