வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (22/05/2018)

கடைசி தொடர்பு:10:53 (22/05/2018)

108ஐ அழைக்கும் குடிமகன்கள்! கண்ணீர் விடும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

108’ஐ அழைக்கும் குடிமகன்கள்.! கண்ணீர் விடும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.!

தேனி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகிப்போனது, புதிய பேருந்து நிலையமும் அதைச் சுற்றியுள்ள ஐந்து டாஸ்மாக் கடைகளும். பேருந்து நிலையத்திற்கு வரும் அனைவரையும் அச்சுறுத்தும் குடிமகன்களால், பலர் புதிய பேருந்து நிலையத்திற்கே வருவதில்லை. குறிப்பாக, கலெக்டர் அலுவலகத்தில் வேலைசெய்யும் பெண்கள், தினம் ஒரு புதிய பிரச்னையை உருவாக்கிக் கொண்டிருக்கும் குடிமகன்கள் தற்போது ஆரம்பித்திருப்பது, 108 ஆம்புலன்ஸை அழைப்பது. மாலை 6.30 மணிக்கு அவசரமாக புதிய பேருந்து நிலையத்தை நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தோம்.

டாஸ்மாக் அருகே, குடிமகன் ஒருவர் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு போதையில் கீழே கிடக்கிறார். அவரைச் சுற்றி மூன்று பேர் சூழ்ந்து நிற்கிறார்கள். வீழ்ந்துகிடப்பவருடன் டாஸ்மாக் கடைக்கு வந்தவர்கள், நினைவின்றி போதையில் கிடக்கும் ஆசாமியை ஆம்புலன்ஸில் ஏற்றி, அவரது வீட்டுக்கு அழைத்துச்செல்லச் சொல்லி ஆம்புலன்ஸ் ஊழியருடன் பிரச்னை செய்கிறார்கள். ஆம்புலன்ஸ் ஊழியர் மறுக்கிறார். அருகில் நின்ற  ஆட்டோ ஓட்டுநர்கள் தலையிட்டு, ஆம்புலன்ஸ் ஊழியரை மீட்கிறார்கள். பேருந்து நிலையம் என்பதால் உடனே பொதுமக்களும் சேர்கிறார்கள். இதை அறிந்த அந்த போதை ஆசாமிகள் ஓட்டம்பிடிக்கிறார்கள். ஆம்புலன்ஸ் ஊழியரிடம் பேசினோம், ‘’தினமும் இதே பிரச்சனைதான். சேர்ந்து குடிக்க வருகிறார்கள். அதில் ஒருவர், அதிகமாகக் குடித்துவிட்டு கீழே விழுந்துவிட்டால், உடனே ஆம்புலன்ஸை அழைக்கிறார்கள். அந்த நபரை வீட்டில் விடச்சொல்லி பிரச்னை செய்கிறார்கள். மறுத்தால், போதையில் தகராறு செய்கிறார்கள். விழுந்துகிடப்பவர் காயம் பட்டிருக்கிறாரா? பாம்பு, தேள் போன்ற விஷ உயிரினங்கள் கடித்திருக்கிறதா என்று முதலில் பார்ப்போம். அப்படி இருந்தால், உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வோம். எந்த பாதிப்பும்  இல்லாமல், போதையில் படுத்துக் கிடப்பவரை எப்படி வீட்டில் விட முடியும்?’’ என்றார், அந்த ஊழியர்.

'புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும்' என்று வேகமாக களத்தில் இறங்கிய தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவை அமைதியாக்கியது யார்? எப்போதுதான் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்?