வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (22/05/2018)

கடைசி தொடர்பு:08:55 (22/05/2018)

"தொண்டாமுத்தூருக்கு நானே வர்றேன்!" - அமைச்சர் வேலுமணிக்கு டி.டி.வி.தினகரன் சவால்

டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க-வினரைத் தாக்கியதாகச் சொல்லி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 56 பேர் கைதுசெய்யபட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் நாளுக்கு நாள் பூதாகரமாகிவருகிறது. அமைச்சர் வேலுமணியின் தூண்டுதலில்தான் இது நடந்திருக்கிறது. எங்களிடம் எல்லா ஆதாரமும் இருக்கிறது. தொண்டாமுத்தூருக்கு நானே வர்றேன் என்று கோவையில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுள்ள அ.ம.மு.க-வினர் 56 பேரையும் சந்தித்துப் பேசினார். சிறைச்சாலை முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், " அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தூண்டுதலின் பேரில்தான்  எங்கள் கட்சியினரைச் சேர்ந்த 56 பேரை பொய்வழக்கில் கைதுசெய்திருக்கிறார்கள். நான் அப்போது ஊட்டியில் இருந்தேன். தினகரன் என்மீது வீண்பழி சுமத்துகிறார் என்கிறார் வேலுமணி. ஊட்டியில் இருந்தால் என்ன? அவரால் டி.எஸ்.பி-க்கு போனில் இன்ஸ்ட்ரெக்‌ஷன் கொடுக்க முடியாதா என்ன? எங்கள் கட்சியினர் வடவள்ளியில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அது குற்றமா? புக் செய்திருந்த மண்டபத்தின் உரிமையாளரை மிரட்டியிருக்கிறார்கள். இறுதியில் நிர்வாகியின் வீட்டிலேயே செயல்வீரர்கள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். வேலுமணியின் பினாமியான சந்திரசேகரின் ஆட்கள், கூட்டம் முடித்து வந்த எங்கள் நிர்வாகிகளின் கார்களையெல்லாம் அடித்து உடைத்திருக்கிறார்கள். அப்படி செய்தவர்களை கைது செய்யுங்கள் என்று சாலைமறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் சேலஞ்சர் துரை உட்பட 56 பேர் மீது பொய் வழக்குகளை போட்டு உள்ளே தள்ளியிருக்கிறார்கள். காவல்துறை நடுநிலை தவறிவிட்டது. எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன டி.எஸ்.பி. வேல்முருகன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடர உள்ளோம். அவர்கள் எல்லோரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.  

எங்களிடம் எல்லா எவிடென்ஸும் இருக்கிறது. தமிழகத்தில் காட்டாட்சி நடைக்கிறது. வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டதால்தானே எங்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். 56 பேரும் ஜாமினில் வரட்டும். நானே தொண்டாமுத்தூருக்கு வந்து செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துகிறேன். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அந்த விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஆளும் கட்சியினர் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அ.தி.மு.க-வில் சேலஞ்சர் துரை போன்றவர்களுக்கு ஜூனியராக இருந்த எஸ்.பி.வேலுமணி தற்போது அவர்களையே கைது செய்ய சொல்லியிருக்கிறார்.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியில்தான் அழிவு என்பதை  எஸ்.பி.வேலுமணி  உணர்ந்துகொள்ள வேண்டும்' என்றவர்,

சேலம் - சென்னையிடையே 8 வழி  பசுமை வழி சாலை அமைப்பது  தேவையற்றது என்று மக்கள் போராடி வருகிறார்கள்  அடுத்தகட்டமாக அது தொடர்பாக  போராட்டம் நடத்த மக்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடகத்தில் ஜனநாயக படுகொலை நடத்தப்படாமல்  காப்பாற்றப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனை இருப்பதால் அங்கு ஆட்சி அமைத்த இருவருக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கவில்லை' என்றார்.