2.40 கோடி மதிப்பில் 109 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய அமைச்சர்..! | Minister M.R.Vijayabasakar participated people welfare schemes in Karur

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (22/05/2018)

கடைசி தொடர்பு:08:00 (22/05/2018)

2.40 கோடி மதிப்பில் 109 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய அமைச்சர்..!

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட கோதூரில், 109 பயனாளிகளுக்கு ரூ 2.40 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். 

 

கரூர் கோதூரில் நடைபெற்ற விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று, 109 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, 'அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டுமென அரும்பாடுபட்ட ஜெயலலிதா அரசின் உதவிகளைப் பெறாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கினார்கள். மேலும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை என்ற அடிப்படையில் மாதந்தோறும் குடுப்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்குவதுடன், விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகின்றன.

பல தலைமுறைகளாக பட்டா இல்லாமல் சிரமப்பட்டுவந்த செல்வ நகர், திருமாநிலையூர், ஒத்தக்கடைபோன்ற பகுதிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. கோதூர் பகுதியில் ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டாக்கள் கூட்டுப்பட்டாவாக உள்ளதால், தனிநபர்கள் வீடுகட்டுவதற்கும் வங்கியில் கடன் பெறுவதற்கும் முடியாமல் இருந்தது.  அதைப் போக்கும் வகையில் நில அளவைத் துறை, வருவாய்த் துறை, அலுவலர்களைக்கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் தனி பட்டா வழங்கப்பட்டுள்ளது.

 பட்டா வழங்கப்பட்ட ஒரு இடத்தின் மதிப்பு ரூ.2.20 லட்சம் ஆகும். 109 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடி மதிப்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 11 ஆயிரம் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க அரசு நிர்ணயம் செய்திருந்தது. இலக்கை விட அதிகமாக 11 ஆயிரம் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குடிசைமாற்று வாரியத்தின் மூலமாக நகர்ப்புற பகுதியில் 6 சதவிகித வட்டியில் ரூ.6 லட்சம் மதிப்பில் வீடு கட்டி பயன்பெறலாம். ரூ.2 லட்சத்துப் பத்தாயிரம் மதிப்பில் கிராமப்புறப் பகுதியில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன.  நகராட்சியின் சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ.75 கோடி நிதியை அரசு வழங்கியுள்ளது.

மாணவ மாணவியர்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், 40 லட்சம் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை உயரும் என்பதை கருத்தில்கொண்டு திருமண நிதியுதவி, அரைப் பவுன், தாலிக்குத் தங்கம் வழங்கியதை உயர்த்தி, 1 பவுன் வழங்கும் திட்டம், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம். கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகால நிதியுதவி, அரசுப் பணிபுரியும் பெண்களுக்கு 9 மாத பேறுகால விடுப்பு எனப் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டுவருகின்றன. மேலும், 700 படுக்கைகள்கொண்ட 150 மருத்துவ மாணவர்கள் பயிலக்கூடிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.268 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவருகிறது" என்றார்.