வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (22/05/2018)

கடைசி தொடர்பு:09:00 (22/05/2018)

ஜூலை 5-ம் தேதி எஸ்.வி.சேகர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகரை வரும் ஜூலை 5-ம் தேதி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி, கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

சமீபத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தைத் தட்டினார். இது, பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அந்தப் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர்.  பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஒருவர் ஃபேஸ்புக்கில் போட்ட பதிவை, எஸ்.வி.சேகர் ஷேர் செய்ய, அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் எஸ்.வி.சேகருக்கு எதிராக தங்களின் கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.

 சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவர்மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். நெல்லை நீதிமன்றத்திலும் அவர்மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்நிலையில், கரூர் ஜே.எம்-2 நீதிமன்றத்திலும் எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. இந்திய குடியரசுக் (அத்வாலே பிரிவு) கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தலித் பாண்டியன், தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் மூலம் இந்த வழக்கைத் தொடர்ந்தார். எஸ்.வி.சேகர் மீதான இந்த வழக்கு விசாரணை கடந்த 15-ம் தேதியே தொடங்கியது. இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது,'விசாரணைக்குப் பிறகு எஸ்.வி.சேகருக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்று நீதிபதி சுப்பையா கூறியிருந்தார். இந்நிலையில், 'வரும் ஜூலை 5-ம் தேதி, எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.