காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் விரைவில் ஊரகத் தகவலியல் மையம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், ஊரகத் தகவலியல் மையம் (Rural Informatics Centre) உருவாக்கப்பட உள்ளதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், துணைவேந்தர் சொ. சுப்பையா. 

அழகப்பா பல்கலைக்கழகம்

அப்போது,  "இந்திய நாடு தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி சார் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில்  மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆகவே, இந்த நவீன தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை  இன்னும்  அதிகமாக,  ஊரகம்  சார்ந்த இந்திய துணைக்கண்டத்தின் வளர்ச்சிக்குத் திட்டம்தீட்டுதலில் பயன்படுத்தினால், நமது  நாடு   மிகப்  பெரிய  வளர்ச்சியை அடைய முடியும்.

உயிரியல், எரிசக்தியியல், உணர்விகள், உயிரியல் சார் தகவலியல், சமூகவியல், கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் எனப் பல துறைகளில் முன்னேறி, இந்திய அளவில் உயர்மட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் அழகப்பா பல்கலைக்கழகம், தற்போது புவி அறிவியல், செயற்கைகோள் சார் தொலைஉணர்வு மற்றும் கணினி சார் புவி தகவலியல் ஆகியவற்றில் முன்னேறத் தொடங்கியுள்ளது.  இந்நிலையில், அழகப்பா பல்கலைக்கழகம் பரந்துவிரிந்த கிராமப்புறம் சார்ந்த  பகுதியில் அமைந்திருப்பதால்,  கல்வி மற்றும் ஆராய்ச்சித் திறன் வலிமையைக் கருத்தில்கொண்டு,  அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஊரகத் தகவலியல் மையம் (Rural Informatics Centre) உருவாக்கப்பட உள்ளது.  இந்த மையம், ஊரகம் சார் இயற்கை வளங்கள், இயற்கைப் பேரிடர், கல்வி,  மருத்துவம்,  வேளாண்மை,  போக்குவரத்து, மின் மற்றும் எரிசக்தி போன்றவற்றில் கிராமங்களின் நிலை, மனிதவளம்  சார்ந்த  விவரங்களை  செயற்கைக்கோள் சார்  புகைப்படங்கள், நேரிடையான அளவீடு, தகவல் சேகரிப்பு ஆகியவற்றை கணினி மூலம்  வரைபடங்களாகத் தயார்செய்து,  தகவல்கள் அனைத்தையும் ஊரகத் தகவலியலாக உருவாக்க உள்ளது.

இதன்மூலம் வளர்ச்சித் திட்டங்கள் தீட்டுவதற்கும்,  ஊரக நிர்மாணத்திற்கும், ஊரகத் தகவலியலிருந்து  ஊரக  இயற்கை  வளம்,  துறைகள்  சார் வளர்ச்சித் திட்டங்களின்  தேவை, மனித வளம் சார் பிரச்னைகளுக்கான ஆய்வுகளை நடத்தி, அதன் முடிவுகளைப் பெற  முடியும்.  ஊரகத்  தகவலியல் பற்றி  அரசு  அலுவலர்களுக்கும்,  ஆராய்ச்சியாளர்களுக்கும்  தேவையான  கருத்தரங்குகள்,  பயிற்சிப்பட்டறைகள்  நடத்துவதோடு   பாடத்திட்டங்களையும் வழங்கும்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!