ப்ளஸ் டூ மதிப்பெண் குறைந்தது தனியார் கல்லூரிகளுக்குச் சாதகம்...! கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

ப்ளஸ் டூ மதிப்பெண் குறைந்தது தனியார் கல்லூரிகளுக்குச் சாதகம்...! கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் 60 சதவிகிதம் பேருக்கும் அதிகமானோர் 800-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருப்பதால், தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். 

சுயநிதி கல்லூரி

இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் 1,000 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் 11.23 சதவிகிதம் பேர் மட்டுமே. இவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும், முன்னணி தனியார் கல்லூரிகளிலும் இளநிலை பட்டப்படிப்பில் சிரமம் இல்லாமல் சேரலாம். 900 - 1000 மதிப்பெண் வரை பெற்றவர்கள் 12.47 சதவிகிதம் பேர். இவர்களுக்கு இரண்டாம் நிலையில் உள்ள கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். ஆனால், 900 மதிப்பெண்ணுக்குக் குறைவாக உள்ளவர்கள் 70 சதவிகிதத்துக்கும் கூடுதலாக உள்ளனர். இவர்களுக்கு இடம் கிடைப்பதில் பெரும்போட்டி நிலவும். மதிப்பெண் குறைவாக இருப்பதால், மாணவர்களும் பெற்றோர்களும் தனியார் பொறியியல் கல்லூரிக்கும், கலைக்கல்லூரிக்கும் படையெடுத்து வருகின்றனர். இதனால் கல்லூரியின் அனைத்து இடங்கள் நிரம்பாமல் தடுமாறிய சுயநிதிக் கல்லூரிகள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கின்றன. 

கல்வியாளர் நெடுஞ்செழியன், ``ப்ளஸ் டூ தேர்வு முடிவில் மாணவர்களின் மொத்த மதிப்பெண் குறைந்தது  கல்வி திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா அல்லது ஏதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், மாணவர்களின் நிலை பரிதாபமே. தேர்வுத்தாள்களைத் திருத்தும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறிப்பிட்ட மதிப்பெண் பெறும் வகையில் திட்டமிட்டு திருத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு 1000-க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. 800-க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இருக்கிறது. இதனால், தேர்வு எழுதியவர்களில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் தனியார் பொறியியல் கல்லூரியில் அல்லது அறிவியல் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்திச் சேர வேண்டிய நிலையில் உள்ளனர். 

தமிழக அரசு, கல்வியில் சமநிலையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, பொருளாதார அளவில் பின் தங்கியவர்களையும், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களையும் முன்னேறாமல் தடுத்திருக்கிறது. இதுவரை, பொறியியல் கலந்தாய்வுக்கு 94,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 15,000-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் நல்ல மதிப்பெண்ணைப் பெறும்போது தமிழக மாணவர்களுக்குச் சிக்கல்தான் " என்றார். 

பள்ளி ஆசிரியர்களிடம் பேசியபோது, ``இந்த ஆண்டு பொதுத்தேர்வில் நேரடியாகக் கேட்காமல் மறைமுகமாக நிறைய கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் சரியாக எழுத முடியாமல் தடுமாறினர். இந்த நிலையில், தேர்வுத்தாளைத் திருத்தும்போது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப் பாடத்துக்கும் முழு மதிப்பெண் வழங்க வேண்டாம் என்று உத்தரவிட்டது தேர்வுத்துறை. இதனால் அறிவியல் பாடங்களைப் படித்தவர்களுக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டன. இதற்குக் காரணம், அண்மைக்காலமாக தனியார் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களை நிரப்புவதற்காகக்கூட இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது" என்றனர். 

தமிழ்நாடு முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சில தனியார் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், தகவல் தெரியாததால் மாணவர்கள் அல்லாடி வருகின்றனர். 

`பொறியியல் கலந்தாய்வுக்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் நிலையில், அறிவியல் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது. காலையில் கல்லூரிக்குச் சென்றால் மாலையில் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும், மாலையில் சென்றால் காலையிலேயே விண்ணப்பம் வழங்கி முடித்துவிட்டதாகவும் சொல்லி அலைக்கழிக்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம். விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. இதுகுறித்து உயர்கல்வித் துறையினர் ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைக்குக் கொண்டு வர வேண்டியது அவசியம்’ என்கிறார்கள் பெற்றோர்கள். 

``மருத்துவக்கல்லூரியில் தனியார் நிர்வாக இடங்களுக்கே அரசு கவுன்சலிங் வழியே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பொறியியல் கல்லூரியிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு வழியே  மாணவர்கள் சேர்கின்றனர். இனிவரும் காலங்களில் தனியார் பொறியியல் கல்லூரியின் நிர்வாக இடங்களுக்கு அரசு கலந்தாய்வு வழியே நிரப்பப்பட வேண்டும். அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த கலந்தாய்வு வழியே மாணவர்களின் சேர்க்கையை நடத்திட வேண்டும்" என்று கோரிக்கை வைக்கிறார்கள் கல்வியாளர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!