வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (22/05/2018)

கடைசி தொடர்பு:11:14 (22/05/2018)

குமாரசாமி பதவியேற்பு விழாவில் பா.ஜ.க அல்லாத அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

கர்நாடக முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ள ம.ஜ.த கட்சியின் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து, தன் பதவியேற்பு விழாவுக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்தார்.

குமாரசாமி

கர்நாடகத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, நடந்த குழப்பங்கள் சற்று தணிந்த நிலையில், தற்போது அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள ம.ஜ.த கட்சியின் குமாரசாமி, அனைத்து மாநில தலைவர்களையும் நேரில் சந்தித்து, நாளை நடைபெறவுள்ள கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். பின்னர், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துதெரிவித்துள்ள ராகுல் காந்தி, “ நான் இன்று ம.ஜ.த கட்சியின் குமாரசாமியைச் சந்தித்தேன். எங்களின் சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்தது. பிறகு, கர்நாடகாவில் நிலவும் அரசியல் நிலைகுறித்தும், இரு கட்சிகளின் பரஸ்பர விஷயங்கள்குறித்தும் விவாதித்தோம். நான், வரும் புதன்கிழமை (23.5.18) கர்நாடகாவில் நடைபெற உள்ள அவரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளேன்,” எனப் பதிவிட்டிருந்தார். 

தன் பதவியேற்பு விழாவில், 'காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகிய இருவரும் நிச்சயம் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளனர்' என்று குமாரசாமி கூறியுள்ளார். இவர்களைத்தொடர்ந்து,  தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப்பிரதேசத்தின் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி ஆகிய அனைவரும் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறினார்.