100-வது நாளில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் பொங்கிய 21 கிராம மக்கள்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, வணிகர்கள் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். பழைய பேருந்து நிலையம் எதிரில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடையடைப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் 21 கிராம மக்கள், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளதால், தூத்துக்குடி மாநகரம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர், இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவெடுத்து ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சப்-கலெக்டர் பிரசாத்  மற்றும் எஸ்.பி., மகேந்திரன் ஆகியோர்  தலைமையில் நடைபெற்ற வணிகர்கள் சங்கம், மீனவர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் சமாதானக் கூட்டத்தில்  உடன்பாடு ஏற்பட்டு,  ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடைபெறுவதாக இருந்த முற்றுகைப் போராட்டம், பழைய பேருந்து நிலைய எதிரில் உள்ள எஸ்.ஏ.வி., பள்ளி  மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால், "இக்கூட்டத்துக்கு எங்களை அழைக்கவில்லை. எனவே, இந்த உடன்பாட்டு முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம். திட்டமிட்டபடி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடக்கும்" என கிராம மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று (21.5.18) இரவு தூத்துக்குடி சிப்காட் மற்றும் தெற்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில், 144 தடை உத்தரவை பிறப்பித்தார் ஆட்சியர் வெங்கடேஷ்.

இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர். இதனால், தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆட்சியர் அலுவலகம், எஸ்.ஏ.வி பள்ளி மைதானம்,  ஸ்டெர்லைட் ஆலை மற்றும் கடற்கரைகள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மினிபேருந்துகள் ஓடவில்லை.

போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 21 கிராம மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!