வந்துவிட்டது ஹூண்டாய் எலீட் ஐ20 ஆட்டோமேட்டிக் | Hyundai i20 Elite CVT variant launched

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (22/05/2018)

கடைசி தொடர்பு:11:28 (22/05/2018)

வந்துவிட்டது ஹூண்டாய் எலீட் ஐ20 ஆட்டோமேட்டிக்

2 வேரியன்டில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது CVT கியர்பாக்ஸ்.

ஹூண்டாயின் பெரிய ஹேட்ச்பேக் கார் எலீட் ஐ20-யில், ஆட்டோமேட்டிக் வேரியன்ட் வெளியாகியுள்ளது. மேக்னா மற்றும் ஆஸ்டா வேரியன்ட்டில், CVT கியர்பாக்ஸ் வந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் ஹூண்டாய் எலீட் ஐ20 ஃபேஸ் லிஃப்ட்டை வெளியிட்டது. பழைய மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன்  CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வரும். ஆனால், ஃபோஸ் லிஃப்ட் காரில் விலையைக் குறைப்பதற்காக 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டைக் கொண்டுவந்துள்ளது இந்நிறுவனம்.

எலீட் ஐ20

ஆட்டோமேட்டிக் காரில் வரும் 1197cc இன்ஜின், 83 bhp பவர் மற்றும் 115 Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது. 4 மீட்டருக்குக் குறைவான 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்களுக்கு 29 சதவிகித வரி மட்டுமே. இதுவே, 4 மீட்டருக்கு அதிகமான பெரிய இன்ஜின் கொண்ட கார்களுக்கு 43 சதவிகித வரி. இன்ஜினை மாற்றி, காரின் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளது, ஹூண்டாய். தற்போது இருக்கும் மேனுவல் வேரியன்ட்டின் விலையைவிட, ஆட்டோமேட்டிக் வேரியன்ட் 1 லட்சம் வரை கூடுதல் விலை கொண்டுள்ளது.

மேக்னா CVT வேரியன்ட்டின் விலை ரூ.7.04 லட்சம் மற்றும் ஆஸ்டா  CVT-யின் விலை ரூ.8.16 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த விலை, போட்டியாளர்களான ஹோண்டா ஜாஸ் மற்றும் மாருதி பெலினோவைவிடக் குறைவு. கியர்பாக்ஸ் தவிர இந்த காரில் எந்த மாற்றமும் இல்லை.