வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (22/05/2018)

கடைசி தொடர்பு:13:08 (22/05/2018)

ம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

 

திருச்சி விமான நிலையத்தில், கடந்த 19-ம் தேதி ம.தி.மு.க - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில், சீமான் உள்ளிட்ட 8 பேர்மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி,  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீமான் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர், கடந்த 19-ம் தேதி, திருச்சி விமான நிலையம் வந்தனர். அவர்களை வரவேற்க வந்த இரு கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதில், 8 பேர் பலத்த காயமடைந்த நிலையில் இரு தரப்பினரும் பரஸ்பரம், விமான நிலையத்தில் புகாரளித்தனர். சீமான் உள்ளிட்ட 8 பேர்மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 சீமான்

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், சம்பவம் நடக்கும்போது அந்தப் பகுதியில் நான் இல்லை. மேலும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவருகிறேன். எனவே, இந்த வழக்கில் என்னை கைதுசெய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். இந்த மனு, நாளை விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.