வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (22/05/2018)

கடைசி தொடர்பு:13:34 (22/05/2018)

`அவரு சொல்றது பொய்யய்யா...' - கொள்ளையனால் சிக்கிக்கொண்ட எம்.பி.ஏ பட்டதாரி!

பட்டதாரி


குன்றத்தூர் சங்கர் நகர் போலீஸ் நிலையத்துக்குச் சென்ற எம்.பி.ஏ பட்டதாரி, தன்னுடைய செல்போன் மற்றும் மூன்று சவரன் செயினை மர்ம நபர்கள்  பறித்துக்கொண்டு போய்விட்டதாகப் புகார் கொடுத்தார். புகார் கொடுத்த எம்.பி.ஏ பட்டதாரி, சென்னை போலீஸை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர், ரகுராம். இவர், குன்றத்தூர் சங்கர்நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.  ''சம்பவத்தன்று, நள்ளிரவில் நான் வீட்டுக்குச் சென்றபோது, என்னுடைய பைக் பழுதானது. அப்போது, மூன்று சிறுவர்கள் எனக்கு உதவி செய்தனர். அவர்களில் ஒருவர்தான் என்னுடைய செல்போன் மற்றும் நான் அணிந்திருந்த மூன்று சவரன் செயினை திருடியிருக்க வேண்டும். அதைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியிருந்தார். 

புகாரின் பேரில், உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள், ரகுராமின் செல்போன் நம்பர் ஆகியவற்றின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, ரகுராமுக்கு உதவி செய்ததுபோல நடித்து, அவரின் செல்போனைத் திருடிய அண்ணாநகரைச் சேர்ந்த இமானுவேல் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். இமானுவேலிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "எம்.பி.ஏ பட்டதாரியான ரகுராம், சோளிங்கநல்லூரில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். கடந்த 19-ம் தேதி இரவு, வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்குச் சென்றார். துரைப்பாக்கம் பகுதியில் வந்தபோது, திடீரென பைக் நடுவழியில் நின்றது. இதனால், அந்தப் பகுதியில் உள்ளவர்களின் உதவியை நாடினார்.  அப்போதுதான் பெட்ரோல் இல்லாமல்  பைக் நடுவழியில் நின்றது தெரியவந்தது. பெட்ரோல் போட்டுக்கொண்டு அங்கிருந்து ரகுராம் புறப்பட்டார். வீட்டுக்குச் சென்றபோது, அவரின் செல்போன் மாயமானது தெரியவந்தது. இதனால், சங்கர் நகர் போலீஸ் நிலையத்திலும் குன்றத்தூர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.

எங்களிடம் சிக்கிய இமானுவேலிடம், ரகுராமின் செல்போன் மட்டுமே இருந்தது. செயின்குறித்து அவரிடம் விசாரித்தபோது அவருக்கு எதுவும் தெரியவில்லை. அதுபோல, சம்பவத்தின்போது உதவி செய்த மற்ற இருவரிடமும் விசாரித்தோம். அவர்களுக்கும் செயின் விவரம்  தெரியவில்லை. இதனால், ரகுராமிடம் செயின் குறித்து துருவித்துருவி விசாரித்தோம். அப்போது, அவர் தெரிவித்த தகவல் எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்போன் மட்டுமே திருட்டுப்போன நிலையில், செயினையும் மர்ம நபர்கள் திருடிவிட்டதாக ரகுராம் பொய்யாகப் புகார் கொடுத்தது தெரிந்தது. இதனால், பொய்ப் புகார் கொடுத்த அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளோம். ரகுராமின் செல்போனின் மதிப்பு 16,000 ரூபாய். செல்போனைத் திருடியதற்காக இமானுவேலை கைதுசெய்துள்ளோம்'' என்றனர். 

ரகுராமின் செல்போனைத் திருடிய இமானுவேலுக்கு அதை எப்படி ஓப்பன் செய்வது என்றுக்கூடத் தெரியவில்லை. 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அந்த செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருக்கிறார். ரகுராமிடம் எதற்காக பொய்ப் புகார் கொடுத்தீர்கள் என்று போலீஸார் கேட்டதற்கு, 'குற்றவாளிகளை உடனடியாக போலீஸ் கண்டுபிடிக்காது. காலம் கடந்த பிறகு குற்றவாளியைக் கண்டுபிடிக்கும்போது, மூன்று சவரன் செயினும் கிடைக்கும் என்ற ஆசையில்தான் இப்படி புகார் கொடுத்துவிட்டேன்' என்று கூறியிருக்கிறார். இதனால், அவரிடம் மன்னிப்புக் கடிதத்தையும் போலீஸார் எழுதி வாங்கியுள்ளனர். 

படித்தவர்களே இப்படி காவல்துறையை அலைக்கழிக்க பொய்ப் புகார் கொடுத்த சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.