வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (22/05/2018)

கடைசி தொடர்பு:13:52 (22/05/2018)

ரிக்‌ஷா ஓட்டுபவரின் மகளுக்கு வங்கிப் பணி! நம்பிக்கை மனிதர்களின் மையம்

ரிக்‌ஷா ஓட்டுபவரின் மகளுக்கு வங்கிப் பணி! நம்பிக்கை மனிதர்களின் மையம்

வங்கிப் பணி

கொஞ்சம் சிரமப்பட்டு தேடினால்தான், சென்னை பாரீஸ் கார்னரில் உள்ள அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தைக் கண்டுபிடிக்க முடியும். வாசலில் அறிவிப்பு பலகையும் இல்லை. ஆனால், அந்த மையம் பலரின் வாழ்வில் புதிய வழியையும், கௌரவமிக்க முகவரியையும் தந்துள்ளது. நாம் சென்றபோது, மீப்பெரு வகுத்தியைக் கண்டுபிடிப்பது எப்படி, அதை வினாத்தாளில் எவ்வாறு குழப்பி கேட்பார்கள் என்பதை விளக்கிக்கொண்டிருந்தார் பயிற்சியாளர். டி.என்.பி.சி., ஐ.பி.பி.எஸ்., எஸ்.எஸ்.சி., எஸ்.ஐ உள்ளிட்ட தேர்வுகளுக்கு இங்கே கட்டணமின்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. 

bank exam

சென்னை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், ``எல்.ஐ.சி தொழிற்சங்கம் சார்பாக 2009-ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக, தமிழகம் முழுவதும் 32 இடங்களில் மையங்களைத் திறந்தோம். போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது, எங்கள் மையம் பற்றிய செய்தியை நண்பர்கள், சமூக ஊடகங்கள், செய்தித்தாள் வழியாகப் பகிர்ந்துகொள்வோம். அதைப் படித்து மாணவர்கள் வருவார்கள். எந்தவிதக் கட்டணமும் கிடையாது. 20 அல்லது 21 வகுப்புகளில் பேஸிக் சிலபஸை நடத்துவோம். பயிற்சியாளர்களும் கட்டணம் பெற்றுக்கொள்ளாத தன்னார்வலர்கள்தான். பெரிய கட்டணம் கட்டிப்  படிக்கச்செல்லும் இடங்களைவிடவும் நல்ல பயிற்சியை நாங்கள் தருகிறோம் என்பதற்கு என் மகளே ஓர் உதாரணம். என் மகளை இங்கேதான் பயிற்சிக்கு அழைத்தேன். அவர் வரவில்லை. வேறொரு மையத்தில் கட்டணம் செலுத்தி படிக்கச் சென்றார். ஒவ்வொரு முறை அங்கே சென்றுவந்ததும் அங்குள்ள  நடைமுறைகள் பற்றிச் சொல்வார். அதை ஒப்பிடுகையில், எங்கள் மையம் நிச்சயம் சிறப்பான பயிற்சி அளிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டேன். இங்கே, தேர்வுக்காக மட்டுமே மாணவர்களைத் தயார்செய்யவில்லை. சமூக அக்கறைமிக்க அலுவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும்தான்" என்கிறார்.

 எல்.ஐ.சியில் பணிபுரியும் ஜெயா ஜான், ``முதலில் சிலபஸ் அடிப்படையில் பயிற்சி அளிப்பவர்களை முடிவுசெய்வோம். முடிந்தவரை,  தேர்வு நாள் வரை அவர்கள் எங்களுடன் தொடர்பில் இருப்பதுபோல பார்த்துக்கொள்வோம். இங்கே வரும் பெரும்பான்மையோர் முதல் தலைமுறையாகக் கல்விப் பெற்றவர்கள். சென்னையைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து வருகிறார்கள். அதனால், கூடுதல் கவனம்கொள்கிறோம். அவர்களுக்கு நேர்முகத் தேர்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட அனைத்தும் கற்றுத்தருகிறோம்" என்கிறார்.

சண்முகராஜன் 

இந்த மையத்தில் பயிற்சிபெற்று டி.என்.பி.சி எழுதி, கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் சண்முகராஜன், ``கவர்மென்ட் போஸ்ட்டிங் எல்லாம் பணம் கொடுத்து கிடைப்பதுதான் என்று நினைச்சுட்டிருந்தேங்க. வாசுதேவன் சாரிடம் பேசினதுக்கு அப்புறம்தான் 'சரி நாமளும் டி.என்.பி.சி எழுதிப் பார்க்கலாம்னு தோணுச்சு. போஸ்ட்டிங்கும் கிடைச்சது" என்கிறார். 

 எல்.ஐ.சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கங்காதரன், இந்த மையத்தின் தன்னார்வலர். ``ஒருமுறை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி வந்துட்டிருந்தேன். செக்கர் டிக்கட் கேட்டதும் கொடுத்தேன். அவரை எங்கியோ பார்த்த மாதிரியே இருந்துச்சு. அவரும் சிரிச்சுக்கிட்டே, 'என்ன சார் மறந்துட்டீங்களா? நம்ம மையத்தில் படிக்க வந்திருந்தேனே'னு சொன்னதும் நினைவுக்கு வந்துச்சு. அன்னிக்கு முழுக்க மனசு அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு" என்கிறார், அந்த நிமிடங்களை மனதில் கொண்டுவந்தவாறே.

யுவஶ்ரீ

``அப்பா சப்போர்ட் இல்லாத குடும்பம் எங்களோடது. முதல் தலைமுறை பட்டதாரி. என் ஃப்ரெண்ட்ஸ் மூலம் இங்கே வந்தேன். அதுவரை கவர்மென்ட் எக்ஸாமில் என்னென்ன கேட்பாங்கனுகூட எனக்குத் தெரியாது. 'அது பெரிய விஷயமே இல்லே. இவ்வளவுதான் சிலபஸ்'னு சொல்லி பயத்தைப் போக்கினாங்க. இந்த வாரம் என்ன படிக்கப்போறோம்னும் தெளிவாக ஷெட்யூல் பண்ணிடுவாங்க. அதைச் சரியாக ஃபாலோ பண்ணினாலே போதும். எனக்கு கூட்டுறவு வங்கியிலும், பிறகு, ஐ.பி.பி.எஸ் எக்ஸாம் எழுதியதால் இந்தியன் பேங்கிலும், எல்.ஐ.சியிலும் வேலை கிடைச்சது. இதில், எல்.ஐ.சி-யைச் செலக்ட் பண்ணினேன். வேலைக்குச் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகப்போகுது" என்கிற யுவஶ்ரீ முகத்தில் அத்தனை மலர்ச்சி.

நளினி

அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்புப் பயிற்சி மையம், தமிழகம் முழுவதிலிருந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 900 நபர்களுக்கு அரசுப் பணியை எட்டும் வாய்பை வழங்கியுள்ளது. அவர்களில் ஒருவர்தான், நளினி. தற்போது, சென்னை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிபவர். ``என் அப்பா, ரிக்‌ஷா ஓட்டுறார். ரொம்ப கஷ்டப்பட்டுப் படிக்கவெச்சாலும், படிக்கும் காலத்தில் பார்ட் டைம் வேலைக்கு அனுப்பலை. அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடிச்சேன். ஃபீஸ் கட்டி பயிற்சிக்குச் போற சூழல் இல்லை. அப்போதான் இந்த மையம் பற்றி தெரிஞ்சுக்கிட்டு வந்தேன். வேலைக்கான வழி மட்டுமின்றி, எதையும் எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் கொடுத்துச்சு" என்கிறார் புன்னகையுடன். 

``அரசுத் திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மனிதர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்றால், எவ்வித கைம்மாறும் எதிர்பார்க்காத அதிகாரிகளாக இருக்க வேண்டும். அதற்கான பெருமுயற்சிதான் இது" என்கிறார் வாசுதேவன். 

கடைசி மனிதருக்கும் அதிகாரம் சென்று சேரட்டும். 


டிரெண்டிங் @ விகடன்