ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை! உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்!

 கிருபாகரன்

திருப்பூர் அருகே, சாலை விபத்தில் மகன் உயிரிழந்த துயரம் தாங்க முடியாமல், பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ஈக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் நிசாந்த். இவர், ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள  தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் நிசாந்த் தன் உறவினர் கிருபாகரன் என்பவருடன் பைக்கில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு, மாலையில் மீண்டும் நாமக்கல் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில், பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோவில் இருந்து, எதிர்பாரா விதமாக இயந்திரக் கம்பிகள் சரிந்து விழுந்திருக்கிறது. இதனால், ஆட்டோவை சாலையிலேயே நிறுத்திவிட்டு, இயந்திரத்தை மீண்டும் ஆட்டோவில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் அதன் ஓட்டுநர்.

நிசாந்த்

அப்போது, கோவையில் இருந்து அதிவேகமாக வந்துகொண்டிருந்த நிஷாந்தின் பைக், சாலையில் இருந்த அந்த இயந்திரத்தின்மீது படுபயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், பைக்கில் வந்த நிஷாந்தும் கிருபாகரனும் பலத்த காயமடைந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இருவரையும் அவிநாசி மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றார்கள். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். பின்னர், இருவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், சம்பவம் குறித்துத் தகவலறிந்த நிஷாந்தின் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சியுடன் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அப்போது, பிணவறையில் கிடத்தப்பட்டிருந்த நிஷாந்தின் உடலைப் பார்த்து துக்கம் தாளாமல் அனைவரும் கதறி அழுதனர். ஒருகட்டத்தில், மிகவும் வேதனையடைந்த தந்தை சக்திவேலும் தாய் சுதாவும், நள்ளிரவு அவிநாசி அரசு மருத்துவமனையிலேயே குளிர்பானத்துக்குள் விஷம் கலந்து குடித்திருக்கிறார்கள்.

பெற்றோர்

பின்னர், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச்சென்றனர். அங்கு கவலைக்கிடமாக நிலையில் சிகிச்சை பெற்றுவந்த இருவரும், இன்று அதிகாலையில் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர். ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த ஒரே மகனை சாலை விபத்தில் பறிகொடுத்துவிட்டு, பெற்றோரும் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், நிஷாந்தும் கிருபாகாரனும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணித்தது தெரியவந்தது. தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!