'இனிமேல்தான் பெரிய போராட்டம் நடக்க இருக்கிறது' - எச்சரிக்கும் பாரதிராஜா | barathiraja and velmuragam Blame on tamilnadu government

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (22/05/2018)

கடைசி தொடர்பு:14:05 (22/05/2018)

'இனிமேல்தான் பெரிய போராட்டம் நடக்க இருக்கிறது' - எச்சரிக்கும் பாரதிராஜா

உங்களின் உரிமைக்காக நான்கு முறை தட்டுங்கள் அப்போதும் திறக்கவில்லை என்றால் உடைத்து விடுங்கள் என பாரதிராஜா பேசித்துள்ளார்.

இனிமேல்தான் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம். காத்திருங்கள் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், தூத்துக்குடி மக்களின் நிலைகுறித்தும் தயாரிக்கப்பட்டுள்ள  'தடை அதை உடை' என்ற பாடல் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அதன் குறுந்தகட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் டிராஃபிக் ராமசாமி வெளியிட, இயக்குநர் பாரதி ராஜா பெற்றுக்கொண்டார்.

அதன்பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வேல்முருகன், “ ஸ்டெர்லைட் ஆலையினால் தூத்துக்குடி மக்கள் படும் துன்பத்தையும் அவர்களின் வேதனையையும் மையமாகக்கொண்டு இந்தப் பாடலின் கட்சிகள் மற்றும் பாடல் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும்100-வது நாள் போராட்டமான இன்று வெளியிடப்படுகிறது. இன்று, அங்கு நடைபெறும் போராட்டத்தைக் கலைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதை மீறி போராட்டம் நடத்தும் மக்கள்மீது தடியடி நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த ஆலையை மூட வலியுறுத்தி முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி ஆகியோரை நேரில் சந்தித்து, எங்களின் உணர்வுகளைக் கூற உள்ளோம். அதற்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை எனத் தெரிந்தால் சாதி, மதம், கட்சி என எதையும் பார்க்காமல் தமிழக மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம்.

இவ்வளவு நாள்களாக இல்லாத தடை இப்போது மட்டும் ஏன் போடப்பட்டுள்ளது, எத்தனையோ தலைவர்கள் தூத்துக்குடிக்குச் சென்று தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அப்போதுகூட தடை விதிக்கவில்லை இப்போது மட்டும் ஏன் போடுகிறீர்கள். தமிழக் காவல்துறையை மத்திய அரசு தன் கையில் வைத்துக்கொண்டு, மக்களுக்கு எதிராகச் செயல்பட வைக்கிறது. போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்குச் சிறிதும் மதிப்பளிக்காமல், காவல்துறையினர் இப்படிச் செயல்படுவது பெரும் கண்டனத்துக்குறியது. காவிரிக்காக நாங்கள் செய்த போராட்டத்தினால்தான் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.  தன் சொந்த நாட்டிலேயே பிரதமரை தரை வழிப் பயணம் மேற்கொள்ள முடியாமல் செய்தோம். ஐபிஎல் நடைபெறாமல் தடுத்தோம். ஆனால், நாங்கள் கேட்டது மேலாண்மை வாரியம், அவர்கள் தந்திருப்பது ஆணையம். இது வெறும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே. மேலும், இந்த வீடியோ உருவாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பேசினார்.

பாரதிராஜா

இவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பாரதிராஜா, “நாங்கள் அமைப்பு, கட்சி என எதுவும் பார்க்காமல் இங்கு அனைவரும் ஒன்று திரண்டுள்ளோம். இதற்குக் காரணம், எங்களின் நாடு மட்டுமே. இது என் நாடு, என் காற்று, என் சமூகம், இதன்மீது ஒரு கீறல் விழுந்தால் கூட நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒன்றுதிரட்டி, பெரும் போராட்டத்தை நடத்துவோம். அப்போது அரசு தாங்காது. தற்போதுள்ள இளைஞர்களின் உணர்வு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிவரும் படங்களே அவர்களின் உணர்வுகளைக் கலங்கடிக்கும் விதமாக உள்ளது. இதை மாற்ற வேண்டும். உங்களின் உரிமைகளை நான்கு முறை கேளுங்கள் அதற்கும் மேலே போனால், உடைத்து முன்னேறுங்கள். பயத்தினால்தான் அரசாங்கமே தடை விதிக்கிறது.

தூத்துக்குடியில் போராடும் அனைவரும் தங்களின் மண்ணுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் .அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், காவல்துறை நடத்தும் அராஜகம் பெரும் கண்டதுக்குரியது. அவர்கள் அரசியல் போராட்டம் நடத்தவில்லை என அரசு புரிந்துகொள்ள வேண்டும். அரசு, தமிழக மக்களுக்கு பெரும் துரோகத்தை விளைத்துவருகிறது. ஆறு, மண், மொழி என அனைத்தையும் சீரழிக முயற்சித்துவருகிறது. சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழிச் சாலை திட்டத்தில் மிகப் பெரிய அரசியல் உள்ளது. ஏன், சேலம் முதல் சென்னை வரை குமரி முதல் சென்னை வரை சாலை அமைக்கலாமே. ஏனென்றால், சேலம் முதல் சென்னை வரை அதிகமான மலைகள் உள்ள சாலை என்ற பெயரில் அரசு கனிம வளங்களைச் சுரண்ட உள்ளது. இது, மிகப் பெரும் கொள்ளை. இனிமேல் தான் மிகப்பெரிய போராட்டமே நடைபெற உள்ளது. காத்திருங்கள்” என ஆவேசமாகப் பேசினார்.