வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (22/05/2018)

கடைசி தொடர்பு:15:27 (22/05/2018)

`3 பெண் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப்போகிறேன்' - 9 பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி கண்ணீர்

உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி கண்ணீர்

``என் கணவர், தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டுநராக இருந்தார். அவர் பஸ் ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு வந்து பஸ்ஸிலேயே இறந்துபோனார். அவர் உயிர் பிரியும் சூழ்நிலையிலும் பஸ்ஸை ஓரமாக நிறுத்தி பஸ்ஸில் இருந்த 9 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். ஆனால், அவர் பெற்ற 3 பெண் குழந்தைகளையும் படிக்க வைக்க முடியாமல் தவிக்கிறார்கள். எங்களுக்கு யாராவது உதவி செய்ய வேண்டும்'' என்று தன்னுடைய 3 பெண் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார் தாயார்.

இதுபற்றி அந்தப் பெண்மணியிடம் பேசியபோது, ``என் பேரு சித்ரா. எனக்கு 36 வயசு ஆகுது. நான் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கோணக்கழுத்தானுர் காட்டுவலவு பகுதியில் குடியிருக்கிறேன். எனக்கு கிருத்திகா (21), மோனிஷா (18), மனோரஞ்சினி (16) என மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த மூன்று பேருமே படித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பட்டியலினச் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகள். என் கணவர், பல்லக்காபாளையம் கொல்லப்பட்டியில் உள்ள எஸ்.ஆர்.கே. பள்ளியில் பேருந்து ஓட்டுநராக ஏழு ஆண்டுகள் இருந்தார். என் கணவருக்குக் கிடைத்த குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்திக்கொண்டு குழந்தைகளையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தோம்.

இந்நிலையில் கடந்த 9.3.2018 அன்று காலை 8.30 மணி அளவில் தேவூர் அம்மாபாளையம் அருகே பள்ளி வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென மூச்சுத்திணறி நெஞ்சுவலி ஏற்பட்டு ஆண்டவர் மில் அருகே ஓட்டுநர் இருக்கையிலேயே உயிர் பிரிந்தது. உயிர் பிரியும் நேரத்தில்கூட பள்ளி வாகனத்தை ஓரமாக நிறுத்தி வாகனத்தில் இருந்த 9 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்துபோனார். அவருடைய இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாதது. குழந்தைகளை எப்படிப் படிக்க வைத்து கரை சேர்க்கப் போகின்றேன் என்று பயமாக இருக்கிறது. என் பெற்றோர் மற்றும் யாருடைய ஆதரவும் இல்லை. அரசு கருணை கூர்ந்து என்னுடைய நிலையை அறிந்து உதவி செய்ய வேண்டும்'' என்று கண்ணீர் வடித்தார்.