வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (22/05/2018)

கடைசி தொடர்பு:16:07 (22/05/2018)

`சாதியைக் கல்விக்குள் கொண்டு வராதீர்கள்' - மாணவனின் பேச்சால் அதிர்ந்த முதல்வர்!

கல்வி, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங்

அரசாங்கத்தை எதிர்த்து கேள்விக் கேட்க மக்கள் எப்போதும் முற்படுவதில்லை. கல்வி மையங்களில் காணப்படும் இட ஒதுக்கீடு மற்றும் சாதி வாரியான இலவச மடிக்கணினி விநியோகம் போன்ற செயல்கள் சில நேரங்களில் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும்படி மாணவர்களைத் தூண்டுகிறது. போபாலில் உள்ள மாதிரி பள்ளி கலையரங்கில் கூடியிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானிடம் ஒரு மாணவன், `சாதியைக் கல்விக்குள் கொண்டு வராதீர்கள்' என்று கூற திகைத்து விட்டார் முதல்வர்.

இந்த மாணவனின் நண்பனுக்கு, அவன் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியுள்ள மாணவன் என்பதால் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவன் தன்னைவிட 3 சதவிகித மதிப்பெண் குறைவாகப் பெற்றுள்ளான். அவன் செலவிட்ட அதே நேரத்தைத் தானும் செலவிட்டு படித்து 80 சதவிகித மதிப்பெண் பெற்ற தனக்கு இலவச மடிக்கணினி அளிக்கப்படவில்லை. அனைவரையும் சமமாகக் கருதுங்கள் என்று தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறார் மாணவர்.

மூன்று முறைக்கு மேல் சாதி பற்றிய தனது அதிருப்தியை வெளியிட்ட இந்த மாணவனை அதிகாரிகள் அமைதிபடுத்த முயன்றபோது அவர்களைத் தடுத்து அம்மாணவனுக்கு பதிலளித்தார் முதல்வர். "சில மாணவர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்து நாம் புகார் அளிக்கக் கூடாது. நமது நாட்டில் பல வண்ணங்களில் மலர்கள் உள்ளன. எல்லாவற்றையும் நாம் பராமரிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். பரந்த மனதுடன் இருங்கள்" என்றார்.