11 ஆண்டுகளாக முடிவெட்டிக்கொள்ளாத குமாரசாமி ஆதரவாளர்..! - விசித்திர சபதம் ஏன்?

கர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவியேற்க உள்ளார். இவரின் தீவிர ஆதரவாளரான ராமகிருஷ்ண கவுடா, 11 ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறார். ஏன் தெரியுமா?

கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க-வை தொடர்ந்து மூன்றாவது பிரதான கட்சியாக மதச்சார்பற்ற ஜனதாதளம் திகழ்கிறது. மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் எச்.டி.குமாரசாமி. இவர், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் மகன். 1996-ல் நடந்த கர்நாடகத் தேர்தலில் கனகாபுர தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார் குமாரசாமி. 2006-ல் கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது, கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்ட முட்டல் மோதலால் 2007-ல்  முதல்வர் பதவியிலிருந்து விலகினார். ஒரு ஆண்டு மட்டுமே முதல்வராக இருந்தார். 

குமாரசாமி

குமாரசாமி முதல்வராக ஆட்சி செய்தபோது, அவருடைய அரசியல் கொள்கையால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் ராமகிருஷ்ண கவுடா.  விவசாயியான ராமகிருஷ்ண கவுடா மெலுரு கிராமத்தில் உள்ள ராஜநகர் தாலுகாவில் வசித்து வருகிறார். மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியில் இணைந்து ஆக்கபூர்வமாகச் செயல்பட்டிருக்கிறார். அந்தச் சமயம்தான், குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து விலகினார். `குமாரசாமி எப்போது மீண்டும் கர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறாரோ அப்போதுதான் நான் முடி வெட்டிக்கொள்வேன்’ என்று அப்போது சபதமெடுத்தாராம் ராமகிருஷ்ண கவுடா. இதனால் இடையில் 11 ஆண்டுகளாகத் தலைமுடி வெட்டிக்கொள்ளாமல் ஜடாமுடியுடனும் அடர்ந்த தாடியுடனுமே உலாவிக்கொண்டிருந்திருக்கிறார். 

இப்போது மீண்டும் கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பொறுப்பேற்கவிருக்கிறார். இதையடுத்து, ராமகிருஷ்ண கவுடா சபதம் முடிவுக்கு வரவிருக்கிறது. மிகவும் சந்தோஷமாகத் தனது தலைமுடியை வெட்டிக்கொள்ளும் நாளுக்காக ஆவலாகக் காத்திருக்கிறார் ராமகிருஷ்ண கவுடா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!