`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - அமைச்சர் ஜெயக்குமார் பதில்

''தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது'' என ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். 

ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்டக் கிராம மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் 100வது நாளை எட்டியிருக்கிறது. இந்த 100வது நாளில் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர். இதைத் தடுக்க முயன்ற காவல்துறை, அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, பல பேர் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''ஆட்சியர் அலுவலகத்தை கல்வீசி தாக்கியது தவறு. ஜனநாயக அமைப்பில் வன்முறை நடைபெறுவதை ஏற்க முடியாது. போராட்டம் குறித்து முழுத்தகவல் இன்னும் கிடைக்கவில்லை. வன்முறை எதற்கும் தீர்வை ஏற்படுத்தாது. தவிர்க்கும் சூழ்நிலையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கும். மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு அரசு ஆதரவு தராது. ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதுதான் அரசின் நிலைபாடும். முழுமையான தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் கலவரத்தை விசாரிக்க ஆணையம் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!