வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (22/05/2018)

கடைசி தொடர்பு:20:40 (22/05/2018)

நாடோடி இன மாணவருக்கு `மலாலா' விருது!

தமிழகத்தில் 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு தீவிரப் பரிசீலனை செய்து வருகிறது. இந்த நிலையில், ``தான் கற்கும் கல்வியை தன் இனப் பிள்ளைகளும் கற்க வேண்டும்" என்ற நோக்கத்தில், 40க்கும் மேற்பட்ட பிள்ளைகளை தான் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்துள்ளார் நாடோடி இன மாணவர் சக்தி. இவருக்கு `சர்வதேசக் குழந்தைப் போராளி மலாலா விருது' கிடைக்க  உள்ளது.

தமிழக அரசு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் கிராம ஏரிக்கரை ஓரம் துணியால் ஆன குடிசை அமைத்து, 50 க்கும் மேற்பட்ட நாடோடி இன குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அதே பகுதியில் உள்ள பள்ளியில் சக்தி என்ற சிறுவன் 5-வகுப்பு வரை படித்துவிட்டு பலூன் விற்பதற்கு சென்றுவிட்டார். ஒரு திருவிழாவில் சக்தி பலூன் விற்பதை பார்த்த, 5ம் வகுப்பு டீச்சர் மகாலட்சுமி என்பவர் சக்தியை,  ஹேண்ட் இன் ஹேண்ட் என்ற ஒரு அமைப்பின் உதவியோடு காஞ்சிபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப் பள்ளியில் 6ம் வகுப்பு  சேர்த்துள்ளார். அந்தப் பள்ளியில் உள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொண்ட சக்தி, நன்றாக படித்துவந்தார். 7ம்வகுப்பு படித்துவிட்டு 8ம் வகுப்பு வரும்போது, ``நம்மைப்போன்று நம் நண்பர்கள் படிக்க வேண்டும். நம் இன மக்கள் மாற்றத்தை அடையவேண்டும். அவர்கள்  பெரிய லெவலுக்கு வரவேண்டும்" என்ற நோக்கில் ஊசி மணி விற்ற தன் நண்பர்களை அழைத்து அவர்களுக்குப் பள்ளியின் மேல் ஆர்வத்தைத் தூண்டி அவர்களைப் பள்ளியில் சேர்த்துள்ளார்.

மாணவன்சென்ற வருடம் மட்டும் 15 குழந்தைகளை அவர் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்துள்ளார். இந்த வருடம் 9ம் வகுப்பு செல்ல இருக்கும் சக்தி மேலும் 25 குழந்தைகளை தான் படிக்கும் பள்ளிக்கு அழைத்துச் சென்று சேர்ப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். இந்த நிலையில் 9ம் வகுப்பு செல்ல இருக்கும் சக்திக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பின் மூலம் சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான மலாலா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, சக்தியை நேரில் சந்தித்து அவருக்குப் பாராட்டு தெரிவித்தார். அப்போது சக்தி, `எங்கள் இன மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் வசதிகூட இல்லை. எங்கள் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்து கொடுத்தால் நான் இங்கு உள்ள அனைத்துக் குழந்தைகளையும் படிப்பதற்கு அழைத்துச் சென்று விடுவேன். மூன்று வேலையும் சாப்பிடும் அளவுக்கு எங்கள் பெற்றோர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலே அவர்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். பள்ளிக்கு அவர்களே அனுப்பி வைப்பார்கள். வேலை வாய்ப்புக்கு வழி செய்தாலே எங்கள் இனக் குழந்தைகள் நல்ல முறையில் படித்துப் பெரிய ஆளாக வளர்ந்து விடுவார்கள்" என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் கந்தசாமி அந்தப் பகுதி மக்களுக்கு முதற்கட்டமாக அடிப்படை வசதிகளைச் செய்து தர உத்தரவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க