``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு!''- `திகீர்' திருவிழா! | 2000 buffaloes are cut every seven years in name of god

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (22/05/2018)

கடைசி தொடர்பு:20:01 (28/05/2018)

``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு!''- `திகீர்' திருவிழா!

``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு!''- `திகீர்' திருவிழா!

தமிழ்கூறும் நல்லுலகம் எத்தனையோ ரக திருவிழாக்களைக் கண்ணுற்றிருக்கிறது. ஆனால், கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் `எருமை வெட்டு' திருவிழாவைப் பார்த்திருக்குமா என்பது தெரியவில்லை. ஏனெனில், இந்தத் திருவிழா, பார்ப்பவர்களை திக்திக் எனப் பதறச் செய்யும் பகீர் ரகம்! ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடும் இந்தத் திருவிழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எருமைகளை வெட்டி, அவற்றின் பிணங்களைக் கோயிலுக்கு எதிரே உள்ள பெரிய குழியில் கொத்துக் கொத்தாகத் தள்ளி புதைத்துவிடுகிறார்கள். இதுதான் அந்தத் திருவிழா! இப்படிக் கேட்கவே நமது மனதுக்குள் பகீரைக் கிளப்பும் இந்தத் திருவிழா நடப்பது கரூர் மாவட்டத்தில்தான். `கடைசியாக எப்போது நடந்தது, எத்தனை எருமைகளை வெட்டினார்கள், அடுத்த திருவிழா எப்போது நடக்கவிருக்கிறது... இத்தனை கேள்விகளுக்கும் விடை தேட,மேட்டுப்பட்டிக்கே ஒரு எட்டு பயணப்பட்டோம்.

கோயில்

கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையில் இருக்கிறது மேட்டுப்பட்டி. ஊரைச் சுற்றியிருக்கும் மானாவரி நிலங்கள், `மழை எப்போ வரும்?' என்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஊரின் முகப்பில் தென்பட்ட பெருசு ஒருவரிடம், ``இந்த எருமை வெட்டுற திருவிழா நடக்குற கோயில் எங்கே இருக்கு?" என்று கேட்டோம். பதில் ஏதும் சொல்லாத அந்தப் பெருசு, நம்மைக் கூர்ந்து பார்த்தபடி, ``நீ யாரு தம்பி? அதை ஏன் கேட்கிற? அங்கெல்லாம் அசலூரு ஆளுங்க போகக் கூடாது" என்று தடா போட்டார். சுதாரித்துக் கொண்ட நாம், ``அந்தக் கோயிலுக்குப் பக்கத்துல என் நண்பன் நிக்கிறான். அவனைப் பார்க்கணும்" என்று சொல்லவும், நம்பாமல் நம்மை ஏற இறங்க பார்த்தபடி, ``கிழக்குப் பக்கம் ரெண்டு பர்லாங் தொலைவு போ. ரோட்டை யொட்டியே எருமைக் கிடா வெட்டப்படுற திருவிழா நடக்கும் ஸ்ரீ துர்க்கையம்மன் கோயில் வரும்" என்றபடி,மேற்குப் பக்கம் நோக்கி நடக்கத் தொடங்கினார். நாம் கிழக்குப் பக்கமாக நடந்தோம்.

புதைக்கப்படும் இடம்

`பத்திரிகைகாரங்க..' என்று சொல்லி அந்தக் கோயிலுக்குப் போகமுடியாது என்பதை உணர்ந்த நாம், உள்ளூர் நண்பர் ஒருவரை வரவழைத்து, அவரோடு அந்தக் கோயிலுக்குச் சென்றோம். கோயில் முகப்பில் உட்கார்ந்து ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்த இரண்டு பெருசுகள், ``பூசாரி ஊர்ல இல்லை. அவர் இல்லாம யாரும் உள்ளார போக முடியாது" என்று தடுத்தனர். நம்மை அந்தப் பெருசுகளிடம், அறிமுகப்படுத்தும் விதமாகப் பேசிய நண்பர் ``இவங்க பழங்காலக் கோயில்கள் பத்தி ஆராய்ச்சி பண்ண சென்னையிலிருந்து வந்திருக்காங்க. சும்மா உள்ளே போய் பார்த்துட்டு உடனே வந்துருவோம்" என்றார். `சென்னை' என்றதும் கொஞ்சம் மனசு இறங்கிய அந்தப் பெருசுகள், ``உடனே வந்துரணும்'' என்றபடி உள்ளே அனுப்பினர். அந்தக் கோயிலில் முக்கிய சாமி ஸ்ரீ துர்க்கையம்மன்தான் என்றாலும், வலதுபுறம் இருக்கும் வைரவனுக்குத்தான் எருமைக் கிடா வெட்டும் திருவிழா நடத்தப்படுகிறதாம். அந்த வைரவன் சந்நிதியை ஒட்டியே நான்கு புறமும் கல் சுவர்களால் சூழப்பட்ட, அடைப்பு தெரிகிறது. அவற்றில்தான் இரண்டாயிரம் எருமைக் கிடாய்களையும் அடைத்து வைத்து, ஒவ்வொன்றாக வெளியே இழுத்து வெட்டுவார்களாம். வெட்டுவதற்கு முன்பே இந்தச் சுவர் தடுப்புக்குள் நிற்கும் இரண்டாயிரம் எருமைகளையும் கட்டைகளால் அடித்து நையப்புடைத்து, முக்கால் உயிரை எடுத்துவிடுவார்களாம். அதன்பிறகு, ஒரே வெட்டில் சாய்க்க, ஒவ்வோர் எருமையும் உயிரை எளிதாக விட்டுவிடுமாம். இந்த எருமை வெட்டும் திருவிழா ஏழு வருடங்களுக்கு ஒருமுறைதான் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் வைகாசி மாதம் கடைசியில் நடக்குமாம். இந்தத் திருவிழாவில் வெட்டப்படும் இரண்டாயிரம் எருமைகளையும் கோயிலுக்கு எதிரே தோண்டப்படும் பிரமாண்டக் குழியில் தள்ளிப் புதைத்துவிடுவார்களாம். ஏழு வருடங்களில் அத்தனை எருமைகளும் மக்கி மண்ணோடு மண்ணாகப் போய்விடுமாம். மறுபடியும் அடுத்த திருவிழாவுக்கு அதே இடத்தில் குழியைத் தோண்டி, அந்தத் திருவிழாவில் வெட்டப்படும் எருமைகளைப் புதைப்பார்களாம். இத்தனை தகவல்களையும் நம்மை அழைத்துப் போன நண்பர்தான் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அதற்குள், அத்தனை இடத்தையும் நமது புகைப்படக்காரர் நைச்சியமாகப் புகைப்படங்கள் எடுக்க, நைசாக வெளியேறினோம். அந்தப் பெருசுகள் குழாம் நம்மைச் சந்தேகக் கண்ணோட்டத்தோடே பார்த்தது.

திருவிழா

 ``இந்தத் திருவிழா பற்றி யாரிடமாவது நாங்க பேச முடியுமா?" என்று நண்பரிடம் கேட்டோம். பதறிப்போன அவர், ``அதெல்லாம் முடியாது சார். இது கோக்குமாக்கான ஊர். லேசா உங்களைச் சந்தேகப்பட்டாலே, என்ன ஏதுன்னு கேட்காம கேமராவைப் பிடுங்கி உடைச்சுடுவாங்க. உங்களையும் உட்கார வெச்சுடுவாங்க" என்று பயமுறுத்தினார். நாம் விடாமல், ``பேசியே ஆவணுமே" என்று கறார் காட்ட, அந்த ஊரில் பிறந்து பக்கத்து ஊரில் வாக்கப்பட்ட பெண்ணிடம் அழைத்துப்போய், ``ஆராய்ச்சி பண்றவங்க..." என்ற அதே பழைய பொய்யைச் சொல்லிப் பேசவைத்தார்.

கோயில் வளாகம்

 ``இந்தக் கோயில் கடவூர் ஜமீனுக்குச் சொந்தமானது. ஐந்நூறு வருடங்களுக்கும் மேலாக இந்தத் திருவிழா நடக்குது. வைரவன்கிட்ட மக்கள் பல்வேறு வேண்டுதல்களை வெச்சு வேண்டிக்குவாங்க. அது நிறைவேறுனதும், திருவிழா நடக்கும் வருடத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பே எங்க ஊர்ல வந்து எருமைகளை விட்டுடுவாங்க. அதுங்க காடு கரையில் மேய்ஞ்சுட்டு கோயிலுக்கு முன்பு உள்ள திடல்ல ராப்பொழுதுகள்ல படுத்துக்கும். திருவிழா நடக்குறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே அங்கங்கே திரியும் எருமைகளைப் புடிச்சு வந்து, கல்சுவர் அடைப்புல அடைச்சுடுவாங்க. கடைசியா இங்க திருவிழா 2012-ல நடந்துச்சு. அடுத்த திருவிழா வர்ற வைகாசி மாதம் இறுதியில நடக்க இருக்கு. திருவிழாவின்போது இரண்டாயிரம் எருமைகளை வெட்டுறது ஒருபக்கம்னா, இன்னொரு பக்கம், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள், நூற்றுக்கணக்கான கோழிகளை வெட்டி, சாமிக்குப் படைச்சு, அந்தக் கறியைப் பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுப்பாங்க. திருவிழாவின்போது சுத்துப்பட்டு ஐம்பது கிராமங்களைச் சேர்ந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோயில்ல கூடுவாங்க. ஸ்ரீதுர்க்கையம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாசம் கடைசி வெள்ளிக்கிழமை பால்குடங்கள் எடுத்துத் திருவிழா நடத்துவாங்க. கடந்த 2012-ல் நடந்த திருவிழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எருமைகளை வெட்டினாங்க" என்றவர், ``உண்மையில் ஆராய்ச்சி பண்ணத்தானே கேட்கிறீங்க?" என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டார். ``ஆமாங்க, ஆமாம்" என்றபடி, சூதானமாக அங்கிருந்து நகர்ந்த நாம், சூட்டோடு சூடாக கரூருக்குப் பஸ் பிடித்தோம்!


டிரெண்டிங் @ விகடன்