`எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கொடுமை நடந்ததில்லை!’ - துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஸ்டாலின்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளரைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் கேட்டார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை ரத்து செய்துவிட்டு, தூத்துக்குடிக்கு நாளை செல்கிறேன். தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும், இதுபோன்ற கொடுமை நடைபெற்றதில்லை" எனத் தெரிவித்தார். 

ஸ்டாலின்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,``காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான, துப்பாக்கிச்சூட்டுக்கு தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். துப்பாக்கிச் சூட்டில் இதுவரை பத்துப் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும், இன்னும் பல பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் வரும் செய்திகள் பேரதிர்ச்சியளிக்கின்றன. பேரணி நடக்கிறது என்பது முன்கூட்டியே காவல்துறையினருக்குத் தெரிந்த ஒன்று. ஏறக்குறைய 20 ஆயிரம் பேருக்கு மேல் அதில் பங்கேற்பார்கள் என்பது உளவுத்துறைக்கும், டி.ஜி.பி-க்கும் தெரியாத ஒரு ரகசியமான பேரணி அல்ல. அந்த மக்களை முதலமைச்சர் உடனடியாக அழைத்துப் பேசியிருக்க வேண்டும். 

போராடும் யாரையும் சந்திக்கவே கூடாது என்று முடிவெடுத்து, அதிகாரம் என்ற கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு மக்கள் போராட்டம் கண்ணுக்குத் தெரியவில்லை. அவரது நிர்வாகத் திறமையின்மைதான் 10 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைப் பறிக்கும் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதற்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பேரணியைத் தவிர்க்கும் பொருட்டு, மக்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர், தென் மாவட்ட அமைச்சர்களில் ஒருவர் யாராவது சந்தித்து, போராடுவோரை அமைதிப்படுத்தியிருக்கலாம். அதில் அலட்சியமாக இருந்துவிட்டு துப்பாக்கிகளை வைத்துப் போராட்டத்தை கையாளவிட்டது அதிமுக அரசின் இமாலய நிர்வாகத் தவறு. தன் தோல்வியை மறைப்பதற்கு ஒட்டுமொத்த மக்களையும் வன்முறையாளர்களாகச் சித்திரித்து முதல்வர் ஓர் அறிக்கையை வெளியிட்டிருப்பது, துப்பாக்கிச்சூடு நடத்திட எங்கிருந்து உத்தரவு போயிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

குருவிகளைச் சுட்டுக் கொல்வது போல் மக்களைச் சுட்டு வீழ்த்தி விட்டு, மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பளிக்கும் என்று முதலமைச்சர் அறிக்கை விடுத்திருப்பது வெட்கக் கேடானது. துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க, உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியான ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பேரணியை முன்கூட்டியே அறிந்தும் கோட்டை விட்ட, தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனை உடனடியாகப் பதவிநீக்கம் செய்து, மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வைப் போக்கிட அமைச்சர்கள் அடங்கிய குழுவும், முதல்வரும் உடனடியாக தூத்துக்குடி செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!