தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சேலத்தில் போராட்டம்!

போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோடி 100 நாள்களாகப் போராடிவந்த மக்கள், இன்று பேரணியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் போது அவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், அந்த போராட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்கள் கையில் இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை பிடுங்கினார்கள். இதனால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும் சேலம் காவல் துறையினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பிறகு அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

இதுபற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பிரவின், ''மக்களாட்சி தத்துவத்தில் செயல்படும் இந்தியா என்ற ஜனநாயக நாட்டில், சர்வதிகார சிந்தனையோடு காட்டு மிராண்டிகளை போல பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 9க்கும் மேற்பட்ட அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் ஆளும் அ.தி.மு.க., அரசு.

போராட்டத்தை கலைக்க வேண்டும் என்றால் கூட முதலில் வானத்தை பார்த்து சுட்டு விட்டு பிறகு, முட்டிக்கு கீழே சுட வேண்டும். ஆனால், மக்களை எதிரிகளை போல நினைத்து நெஞ்சில் சுட்டு கொலை செய்திருக்கிறார்கள். இதற்காக எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக சொந்த மக்களையே கொலை செய்யும் என்றால், இந்த அரசு யாருக்கான அரசு என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும். இந்த மக்கள் விரோத அரடு கலைக்கப்பட வேண்டும். மக்களை கொலை செய்யும் ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்'' என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!