வெளியிடப்பட்ட நேரம்: 01:34 (23/05/2018)

கடைசி தொடர்பு:01:34 (23/05/2018)

`இறுதி செய்யப்பட்ட அமைச்சர் பதவிகள்' - கர்நாடக துணை முதல்வராக ஜி.பரமேஸ்வர் தேர்வு!

நாளைக் கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்கவுள்ளார். அவருடைய அமைச்சரவையில் துணை முதல்வராகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் பதவியேற்கவுள்ளார். 

பரமேஸ்வர்

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. அதன்படி நாளைக் கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நாடுமுழுவதும் உள்ள பா.ஜ.க எதிர்ப்பு தலைவர்களுக்கு குமாரசாமி அழைப்பு விடுத்துவருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விழாவில் பங்கேற்கவுள்ளனர். இதற்கிடையே, குமாரசாமியுடன்,  துணை முதல்வராகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் நாளைக் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ரமேஷ் குமார் சபாநாயகராகப் பதவியேற்கவுள்ளார். அமைச்சரவையில் யார் இடம்பெறுவது என்பது குறித்து காங்கிரஸ் - மஜத இடையேயான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால்  ``மொத்தம் உள்ள 34 அமைச்சரவையில் 78 இடங்களை வென்ற காங்கிரஸுக்கு 22 அமைச்சர்களும், 37 இடங்கள் வென்ற மஜதவுக்கு முதல்வர் பதவி உட்பட 12 அமைச்சர் பதவிகளும் வழங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் பெரும்பான்மையை நிரூபித்த பின்பே அமைச்சர்களின் இலாக்காக்கள் இறுதி செய்யப்படும்" என்றார். ஜி.பரமேஸ்வர் துணை முதல்வராகக் பதவியேற்றபின் அவர் வகித்த வந்த மாநில தலைவர் பதவி, இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறவும், எம்எல்ஏக்களை பாதுகாத்து எடியூரப்பாவை ராஜினாமா செய்வதிலும், பெரும் பங்கு வகித்த முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க