14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..! கருவூல அதிகாரி கைது!

சமீப காலமாக, சிவகங்கை மாவட்டத்தில் சிறுமிகள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவது, கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சார்நிலை கருவூல அதிகாரி ஒருவர், பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சிவகங்கையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக, சார்நிலை கருவூல அலுவலரை சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் கைதுசெய்தனர். சிவகங்கை நகராட்சி துப்புரவுப் பணியாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவரது குடியிருப்பையொட்டி அமைந்துள்ள சிவகங்கை ஆட்சியர் வளாகக் குடியிருப்பில் வசிப்பவர், ராஜ்குமார் (54). இவர், ஆட்சியர் வளாகத்தில் உள்ள கருவூலகத்தில் சார்நிலை கருவூல அலுவலராக உள்ளார். 

இவரின் வீட்டில் வேலை பார்க்கச் சென்ற சிறுமிக்கு, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பாலியல் தொந்தரவு செய்துவந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து, ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சிறுமி புகார் அளித்துள்ளார். அவரது புகாரை சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணுவிடம் ஆட்சியர் பரிந்துரைசெய்துள்ளார். மருத்துவப் பரிசோதனை செய்ததில், சிறுமி சொன்னது உண்மை எனத் தெரிந்துள்ளது. 

இதுதொடர்பாக, சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணு, சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில், சார்நிலை கருவூல அலுவலர் ராஜ்குமாரை நேற்றிரவு கைதுசெய்தனர்.

ராஜ்குமாரின் மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார். இந்தச் சிறுமியின் தந்தையும் இறந்துவிட்டார். வறுமையில் இருந்த சிறுமியின் படிப்புக்கு உதவிசெய்வதுபோல,  தன்னுடைய இச்சைக்கு அந்தச் சிறுமியைப் பயமுறுத்திப் பயன்படுத்திவந்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், சிறுமி பெரிய பெண்ணாகியிருக்கிறாள். பள்ளிக்கூடம் மற்றும் தன் அலுவலகம் வரை  இந்தச் சிறுமியை ராஜ்குமார் அழைத்து வருவதைப் பார்த்த ஆசிரியர்கள், ''இவருடன் நீ வரக்கூடாது'' என்று கண்டித்திருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக சிறுமி பள்ளிக்குப் போகவில்லை. அதனால், சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். போலீஸில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவுசெய்யாமல், அதிகாரியை காப்பாற்ற டி.எஸ்.பி., மங்களேஸ்வரன் உதவுகிறார் என்ற பேச்சும் ஓடியது. அதன்பிறகுதான், மருத்துவப் பரிசோதனை செய்து உண்மை தெரியவந்ததும், வேறு வழியில்லாமல் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைதுசெய்திருக்கிறது, சிவகங்கை போலீஸ்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!