பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைக்கப்பட வாய்ப்பு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் ரூ.2 முதல் ரூ.4 வரையில் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல்  விலை, ரூ.2 முதல் ரூ.4 வரை விரைவில் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக  எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பெட்ரோலியப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திவருகின்றன. இந்த நிலையில், கடந்த  சில நாள்களி்ல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.76.87 ஆகவும், டீசல்  ரூ.68.08 ஆகவும் அதிகரித்தது. கடந்த 9 நாள்களில் பெட்ரோல்  ரூ.2.24 யும், டீசல் ரூ.2.15 யும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் 2 முதல் 4  ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர்கள், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.  அதன் பின்னர், இதுகுறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் இழப்பை எண்ணெய் நிறுவனங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பது என்பது மத்திய அல்லது மாநில அரசுகள் வரியைக் குறைப்பதன் மூலமாகவும், டீலர்களின் கமிஷனை சற்று குறைப்பதன் மூலமாகவும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை திரும்பப் பெறுவதன் மூலமாகவும் செயல்படுத்தலாம். பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையில்  தற்போது 37-47 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுகிறது. டீலர்களுக்கு 3.8 சதவிகிதம் முதல் 4.8 சதவிகிதம் வரை கமிஷன் வழங்கப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவருவது மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது ஆகியவற்றால், உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து, பெட்ரோலிய மற்றும் நிதி அமைச்சகத்திடம் உரிய ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!